கருணாநிதி வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதிதான் 2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மிக சிறிய தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் சேப்பாக்கம் தொகுதிக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி நீக்கப்பட்டு சேப்பாக்கம் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால் இப்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என்று புதிய தொகுதி உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிக சிறிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது சேப்பாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட மிக சிறிய தொகுதி நாகை மாவட்டத்தில் இருக்கும் கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிதான்.
கீழ்வெள்ளூர் (தனி) தொகுதியில் 70 ஆயிரத்து 284 ஆண் வாக்காளர்களும் 69 ஆயிரத்து 843 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1லட்சத்து 40 ஆயிரத்து 127 வாக்காளர்கள் உள்ளனர்.
கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிக்கு அடுத்தபடியாக சென்னை துறைமுகம் தொகுதி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 75 ஆயிரத்து 621 ஆண் வாக்காளர்களும் 69 ஆயிரத்து 531 பெண் வாக்காளர்களும் 31 திருநங்கைகள் என மொத்தம் 1லட்சத்து 45 ஆயிரத்து 183 வாக்காளர்கள் துறைமுகம் தொகுதியில் இருக்கிறார்கள்.
மூன்றாவது இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி இடம் பெற்றிருக்கிறது. 76 ஆயிரத்து 341 ஆண் வாக்காளர்களும் 72 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 625 வாக்காளர்களை கொண்டிருக்கிறது கந்தர்வக்கோட்டை தொகுதி.
Comments