உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: டெல்லிக்கு வந்திருக்கிறீர்கள். யார் யாரைச் சந்திக்க இருக்கிறீர்கள்?
பதில்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவிருக்கிறேன்.
கேள்வி: என்ன பேசவிருக்கிறீர்கள்? தேர்தல் உடன்படிக்கை செய்ய விருக்கிறீர்களா?
பதில்: நாளைக்கு பேசிய பிறகுதானே விவரங்கள் தெரியும். நாளைக்குச் சொல்கிறேன்.
கேள்வி: எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதெல்லாம் இரண்டு நாட்களுக்குள் உறுதியாகிவிடுமா?
பதில்: இப்போதே சொல்ல முடியாது. பேசிய பிறகு சொல்கிறேன்.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர வேறு எந்தெந்த கட்சிகள் இடம் பெறுவதாக உள்ளன?
பதில்: மற்றக் கட்சிகளோடு இன்னும் பேசவில்லை. தற்போதுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் எங்கள் அணியிலே உள்ளன.
கேள்வி: மீனவர்கள் பிரச்சினை பற்றி பிரதமரிடம் பேசும்போது குறிப்பிடுவீர்களா?
பதில்: தமிழக மீனவர்கள் படும் துன்பங்கள் பற்றி தொடர்ந்து பிரதமரிடம் பேசிக் கொண்டே இருக்கிறேன். இப்போதும் பேசுவேன்.
Comments