Skip to main content

பிரதமரை விட தமிழுக்குதான் பெருமை சேர்ப்பேன்: கருணாநிதி பேச்சு

கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூலை முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 2) வெளியிட்டார். இந்த விழாவில் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான், பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி, மணிரத்தினம் என்று நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். விழாவில் கருணாநிதி ஆற்றிய உரை

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு குரல் கொடுத்தது என்பதைக் காரணமாகக் காட்டி - 1991 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.  அப்படிக் கலைக்கப்பட்ட போது, “குங்குமம்” வார இதழில் வைரமுத்து அவர்கள் எழுதிய ஒரு கவிதை வெளிவந்தது.


“அடியே,  அனார்கலி!
  உனக்குப் பிறகு இந்த நாட்டில்
  உயிரோடு புதைக்கப்பட்டது
  ஜனநாயகம் தானடி”
என்று எழுதியிருந்தார்.  அதைப் படித்துப் பார்த்து நான் அவருக்குத் தொலைபேசியிலே வாழ்த்துச் சொன்னேன்.  வாழ்த்துச் சொல்லிவிட்டு, “ஆட்சிக் கலைக்கப்பட்டதால் எனக்கு ஆதாயம்தான்” என்றேன்.  “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவர் பதற்றத்தோடு கேட்டார்.  நான் சொன்னேன் - “ஒரு அருமையான கவிதை கிடைத்தது அல்லவா?” என்றேன்.  திரும்பச் சொல்கிறேன்.   “அடியே அனார்கலி!” - அப்பொழுதுகூட அனார்கலியைத்தான் கூப்பிடுகிறார்.

“அடியே,  அனார்கலி!
  உனக்குப் பிறகு இந்த நாட்டில்
  உயிரோடு புதைக்கப்பட்டது
  ஜனநாயகம் தானடி”
என்று எழுதியிருந்தார்.  கவிதைகளை ரசிக்கக்கூடிய எனக்கு, ஆட்சிக் கலைக்கப்பட்டது பெரிதாகத் தெரியவில்லை.  இந்தக் கவிதை எனக்கு ஆறுதலாக இருந்தது.  அதனால்தான் அவருக்கு உடனடியாகத் தொலைபேசியிலே வாழ்த்துச் சொன்னேன்.  “இனியும் இப்படிப்பட்ட கவிதைகளை எழுதக்கூடிய நிலை எனக்கு வரவேண்டாம்” என்று வைரமுத்து சொன்னார்.  “எல்லோரும் ஒழுங்காக இருந்தால் அது வராது” என்று நான் அப்போது சொன்னேன்.  “எல்லோரும் இருப்பார்கள் - இருப்பீர்கள்” என்ற நம்பிக்கையோடு இந்த விழாவிலே கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.

நம்முடைய வைரமுத்துவின் கவிதைகள்,  பாடல்கள் “1000 பாடல்கள்” என்ற தலைப்பில் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. தொடக்கக் காலத்திலேயிருந்து பாடல்கள் எழுதுபவர்களுக்குத் தலைவனாக இருப்பவன் நான் என்று தம்பி வைரமுத்து இங்கே சொன்னார்.  நான் பாடல்களை எழுதியதுண்டு.   இன்றைக்குக்கூட உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதற்கான கட்டாயம், அதற்கான நிலை எப்போது வந்தது?  ஏன் வந்தது? என்பதைப்பற்றியெல்லாம் விளக்க விரும்புகிறேன்.

தமிழகத்தில் கட்டாய இந்தியை எதிர்த்து பெரியார் தலைமையிலே பெரிய போராட்டம் நடைபெற்றபோது, நான் பள்ளி மாணவன்.  13 வயது மாணவன்.  அப்போது நான் எழுதிய பாடல். அது பாடலா? கவிதையா? என்பதை நீங்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்!
 நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே!
வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே - நாங்கள்
சாரமில்லாச் சொற்கள் ஏற்கமாட்டோம் வீட்டிலே!"

என்பது அந்தப் பாடல்.  இப்படிப் பாடல் எழுதுவதிலே வந்தது ஆர்வம், என்னுடைய அடித்தளக் கொள்கை - பகுத்தறிவுக் கொள்கை.  அதை நான் மறைத்துப் பேச விரும்பவில்லை.  தம்பி கமல் அதை மறைத்தும் பேசுவார் - மறைக்காமலும் பேசுவார்.  நான் இன்றைக்கும் சொல்கிறேன் - என்றைக்கும் சொல்வேன்.  நான் ஒரு நாத்திகன்.  அந்த நாத்திகக் கொள்கையை இளைஞனாக இருக்கும்போது, பாடல்கள் மூலமாக விளக்கியிருக்கின்றேன்.  அதுவும் மெட்டுக்கு எழுதிய பாடல் ஒன்று.  கவிஞர் வைரமுத்து இங்கே சொன்னாரே, மெட்டுக்கு பாடல் எழுதுவது என்று.  அப்படி நான் எழுதிய பாடல்.  அப்பொழுதெல்லாம் நாடகங்களில், திரையரங்கங்களில் “நாடகமே உலகம்  நாளை நடப்பதை யாரறிவார்?” என்று ஒரு பிரபலமான பாட்டு எல்லோராலும் பாடப்பட்டதுண்டு.  அது என்னைக் கவர்ந்த காரணத்தால், என்னுடைய கொள்கையை, நான் சார்ந்திருக்கின்ற இயக்கத்தினுடைய கொள்கையை அதிலே ஏன் வைக்கக் கூடாது? என்று எண்ணி, “நாடகமே உலகம் நாளை  நடப்பதை யாரறிவார்?” என்ற அந்த வார்த்தைகளுக்குப் பதிலாக,

“கற்பனையே கடவுள்
கால வெள்ளத்தில் கரைந்திடுமே -  அந்தக்
கற்பனையே கடவுள்”
என்று ஒரு பாடல் எழுதினேன்.  இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நானும் அந்தக் காலத்தில் இளைஞனாக இருக்கும்போது, மெட்டுக்குப் பாட்டு எழுதியவன்தான்.  மெட்டுக்குப் பாட்டு எழுதினாலும், எப்படித் தம்பி வைரமுத்து எழுதுகிற நேரத்திலே, அவருடைய உள்ளக்கிடக்கை, அவருடைய கொள்கை, அவர் சார்ந்திருக்கின்ற இலட்சியம் - அந்த இலட்சியத்தினுடைய எதிரொலி என்னவோ, அது அவருடைய பாடல்களிலே ஒலிப்பதுண்டு.   அப்படி ஒலித்த பாடல் ஒன்றைத்தான் முதலிலே உங்களுக்கு நான் பேசத் தொடங்கும்போது எடுத்துச் சொன்னேன்.  “அனார்கலி”யைப் பற்றி அவர் எழுதிய அந்தப் பாடல்.

இப்போது 1000 பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு வெளியாகியிருக்கிறது.   அதிலே திரைப்படத்திற்காக எழுதிய பாடல்கள் பல.  அந்தப் பாடல்களைப் பெற்று - புகழைப் பெற்றவர்கள் அல்லது இலாபம் பெற்றவர்கள் - கீர்த்தி பெற்றவர்கள் எல்லாம் இங்கே உரை நிகழ்த்தி அந்தப் பாடல்களுக்கு மேலும் இங்கே பெருமை சேர்த்திருக்கின்றார்கள்.

நான் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.  புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றி இங்கே பேசினார்கள்.  உடுமலை நாராயண கவி தொட்டு, என்னுடைய அருமை நண்பர் மறைந்த கவிஞர் கண்ணதாசன் வரையில் இந்த இயக்கத்திற்காக எழுதிய பாடல்கள் எல்லாம், அவர்கள் அறிவார்கள் - நீங்களும் அறிவீர்கள்.  கண்ணதாசன் அவருடைய கொள்கையிலேயிருந்து மாறினாலும்கூட, அவர் எழுதிய “திராவிடப் பொன்னாடே!” என்ற அந்தப் பாடலை இன்றும் ஒலிக்கச் சொல்லிக் கேட்கின்ற வழக்கம் எனக்கு உண்டு.  அப்படிப்பட்ட - இதயத்திலே தொய்கின்ற - நெஞ்சிலே பதிகின்ற பாடல்கள் பலவற்றை - கவிஞர் கண்ணதாசன் வழங்கியிருக்கின்றார்.

அந்தக் கண்ணதாசன் பாராட்டிய - நான் பாராட்டுகின்ற - இங்குள்ள கவிஞர்கள் பாராட்டுகின்ற - தம்பி வைரமுத்து பாராட்டிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒரு முறை - இங்கே சொன்னார்களே, இசைக்கும் அதாவது மெட்டுக்கும், பாடல்களுக்கும் இடையே தகராறு வந்து விடுகிறது என்று.  ஒரு முறை நாங்கள் எல்லாம் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருந்தபோது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்னைச் சந்திப்பதற்காக ஸ்டுடியோவிற்குக் காரிலே வந்திருக்கிறார்.  வந்தபோது, அவருடைய காரை ஏ.வி.எம். ஸ்டுடியோவின் முகப்பிலேயே - வாசற்புறத்திலேயே நிறுத்தி விட்டார்கள்.  “ஏனப்பா நிறுத்தி விட்டாய்?” என்று கேட்டதற்கு, அந்த கேட்டிலே இருந்தவர், “உள்ளே ரிக்கார்டிங் நடக்கிறது - கார் போனால் அதனுடைய சத்தம் ரிக்கார்டிங்கில் பதிவாகிவிடும்.   ஆகவே, போக முடியாது” என்று தடுத்து விட்டார்.  அவர் சிறிது நேரம் காரிலேயே உட்கார்ந்திருந்தார்.

பாரதிதாசன் வந்து உட்கார்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, நாங்கள் வாசலுக்குச் சென்று - “என்ன இங்கேயே உட்கார்ந்து விட்டீர்கள்?” என்று கேட்டோம்.  “இல்லை, இதுதான் நடந்தது - ஏதோ, நான் என் காரிலே உள்ளே வந்தால், அந்தச் சத்தம் போய் ரிக்கார்டிங்கைக் கெடுத்து விடுமாம்” என்று சொன்னார்.  “அதெல்லாம் ஒன்றும் கெடுக்காது” என்று சொல்லி, அவரை உள்ளே அழைத்துப் போனோம்.  அவர் சொன்னார் -  “எப்படி ரிக்கார்டிங்கிலே அந்தச் சத்தம் எல்லாம் பதியும்? -  என்னுடைய “கமழ்ந்திடும்” என்ற வார்த்தையை ரிக்கார்டிங் பதிவு பண்ண மாட்டேன் என்கிறது - அது எப்படி இதையெல்லாம் பதிவு செய்யும்?”  என்று கேட்டார்.  “என்ன, சொல்லுங்கள் கதையை” என்றோம்.  “ஒண்ணுமில்லை” - ஒரு ஸ்டுடியோ பேரைச் சொல்லி, அங்கு “கமழ்ந்திடும் பூவில் எல்லாம், தேனருவி கண்டேன்” என்று எழுதியிருந்தேன்.  முதலாளியைக் கூப்பிட்டு - ரிக்கார்டு செய்பவர் அந்த “கமழ்ந்திடும்” என்ற வார்த்தையை எல்லாம் ரிக்கார்டு செய்ய முடியாது - அது ரிக்கார்டு ஆகாது - ரிக்கார்டு ஆனாலும், கேட்பவர்களுக்குப் புரியாது.  ஆகவே, “கமழ்ந்திடும்” என்ற வார்த்தைக்குப் பதிலாக, வேறு வார்த்தையைப் போடச் சொன்னார்களாம்.

உடனே பாரதிதாசனுக்கு கோபம் வந்து, அப்படியா, பரவாயில்லை - “கமழ்ந்திடும்” என்பதற்குப் பதிலாக, “குலுங்கிடும் மலர்களில் எல்லாம், தேனருவி கண்டதாலே” என்று மாற்றி எழுதிக் கொடுத்தேன்.  ஆகவே, “கமழ்ந்திடும்” என்கிற தமிழை ரிக்கார்டு செய்ய முடியாத அந்த மெஷின், கார் சவுண்டை ரிக்கார்டு பண்ணுமா?” என்று ஆச்சர்யத்தோடு பாரதிதாசன் கேட்டார்.  அது ஆச்சர்யம் அல்ல - தமிழைச் சரியாக பதிவு செய்ய முடியாது என்று சொன்னது அவருக்கு அவ்வளவு ஆத்திரத்தை அன்றைக்கு உண்டு பண்ணியது.  ஏன் சொல்கிறேன் என்றால், தம்பி வைரமுத்து இங்கே எடுத்துக் காட்டியதைப்போல, பல பாடல்கள் முழுமையாக நாம் கேட்க முடியாமல், இசை அதைத் திசை திருப்பி விடுகிறது.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.  “மருத நாட்டு இளவரசி” என்று ஒரு படம்.  நான் எழுதியது - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக முதன்முதலாக நடித்தது.   ஜானகி அம்மையார் “மருத நாட்டு இளவரசி”யாக நடித்த அந்தப் படம்.  அந்தப் படத்தை மைசூரிலே ஷூட்டிங் செய்து, ஒரு மாத காலம் தயாரித்து படம் முடிவடைந்ததும், அதை வெளியிடுவதற்காகத் தேதியை எல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு, படத்தைப் போட்டுப் பார்க்கலாம் என்று சென்னையிலே கோடம்பாக்கம் பக்கத்திலுள்ள ஒரு ஸ்டுடியோவில் நாங்கள் அதைப் போட்டுப் பார்த்தோம்.   அந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு, “பேசும் படம்” என்கிற இராமநாதன் அவர்களுடைய பத்திரிகை - அவர் புத்திசாலியான, நல்ல அறிவு படைத்த அய்யர்.  அவர் நடத்திய பத்திரிகை “பேசும் படம்” என்பதாகும்.  அந்தப் “பேசும் படம்” - “வசனத்தாலேயே ஓடுகின்ற ஒரே படம் மருத நாட்டு இளவரசி” என்று அப்போது விமர்சனம் எழுதியது.  அப்படிப்பட்ட படத்தை முதலில் போட்டுப் பார்க்கும்போது, ஒரு வசனம் கூட எங்கள் காதிலே விழவில்லை.  நான்தான் வசனம் எழுதினேன்.  என்ன வசனம் என்பது எனக்குப் புரியவே இல்லை.  எல்லோரும் திகைத்துப் போனோம்.    காசிலிங்கம் டைரக்டர் - அவரும் திகைத்தார்.  எம்.ஜி.ஆர்., எம்.ஜி. சக்கரபாணி, பி.எஸ். வீரப்பா - இவ்வளவு பேரும் பங்கேற்று எடுத்த ஒரு திரைப்படத்தினுடைய நிலை இப்படி.  என்ன செய்யலாம் - நாளைக்கு எப்படி படத்தை வெளியிடுவது? என்று யோசித்தபோது, எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

“தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள் - இந்த ரீ-ரிக்கார்டிங்கை அப்படியே வெட்டி எடுத்து விடுங்கள் - எடுத்து விட்டுப் படத்தைப் போட்டுப் பாருங்கள்” என்றேன்.  அப்படியே இரவோடு இரவாக அந்த ரீ-ரிக்கார்டிங்கை எல்லாம் அகற்றிவிட்டு, மறுநாள் படத்தைப் போட்டால், வசனம் தெளிவாகப் புரிந்தது.  அந்த “மருத நாட்டு இளவரசி” 100 நாள் படமாக ஓடிற்று என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

காரணம், பாட்டுக்களை - வசன ஒலியை - அத்தனையையும் திசை திருப்புகின்ற இசை முழக்கம் அவ்வளவு வேகமாக, இடி முழக்கமாக ஒலித்த காரணத்தால், அதில் அவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டது.  அதனால்தான், தம்பி வைரமுத்து அவர்கள் எவ்வளவு அழகாகப் பாடல்கள் எழுதினாலும், எவ்வளவு எளிமையாகப் பாடல்கள் எழுதினாலும், காதல் வசனம் சொட்டச் சொட்ட கவிதை நடையிலே பாடல்கள் எழுதினாலும், அவை இசையோடு கூடி வரும்போது, மேலும் இனிமையாகத் தரப்பட வேண்டும் என்பதைத்தான் அவர் இங்கே சொன்னார்.  அது இசையோடு கூடி வருகின்ற நேரத்தில், இசையும் புரியாமல், எழுதிய வார்த்தைகளும் புரியாமல் வீணாக ஆகி விடக் கூடாது என்ற கவலைதான் அவருக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் இன்னமும் இருக்கிறது.

ஆகவே, இந்த விழாவிலே கலந்து கொண்டிருக்கின்ற இசை வாணர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வேன் - கவிஞர்களை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம் - அந்தக் கவிஞர்களின் கவிதைகளைக் காப்பாற்றி உயிரோடு, அவைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இசையமைக்கின்றவர்களுக்கு உண்டு.  “இசை” அமைக்கின்றவர்கள் யாரும் நாளைக்கு என்னை “வசை” பாடக் கூடாது.   இப்படிப் பேசினாரே? என்று எண்ணக் கூடாது.  பாட்டுப் புரியும்படியாக இசையமைத்தால்தான், இசையை அமைத்தவர்களுக்கே பெருமை.  பாட்டுப் புரியாமல் இசையமைத்தால், இசை அமைத்தவருக்கும் பெருமை இல்லை - பாட்டு எழுதியவருக்கும் பெருமை இல்லை.

தம்பி வைரமுத்து 1000 பாடல்களை 30 ஆண்டுக் காலத்திலே எழுதி முடித்திருக்கிறார் என்றால், அவர் இங்கே சொன்னதைப் போல, இந்த 30 ஆண்டுக் காலத்தில் ஒரு 20 ஆண்டுக் காலமாக நானும் - அவரும்;  காலையிலே நான் 7-00 மணிக்கெல்லாம் எழுந்து விடுவது வழக்கம்.  8-00 மணிக்கெல்லாம் வைரமுத்து அவர்களுடைய குரல் தொலைபேசியிலே ஒலிக்கும்.  நான் அவருக்கு விடை அளிப்பேன்.  இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.  ஒரு கவிஞரும், கலைஞரும் பேசுகின்ற பேச்சாக மாத்திரம் அல்ல; காதலர்கள் பேசுகின்ற பேச்சைப் போல, அது இருக்கும்.  உலக விஷயங்கள் இருக்கும் - சினிமா விஷயங்கள் இருக்கும் - ரஜினியைப் பற்றிப் பேசுவோம் - கமலைப் பற்றிப் பேசுவோம்.  “என்ன பேசுவீர்கள்?” என்று என்னைக் கேட்காதீர்கள். தனியாக அதைச் சொல்வேன்.  அந்த அளவிற்கு என்னோடு நெருங்கிப் பழகிய நண்பராக, சகோதரராக, என் குடும்ப உறுப்பினர்களிலே ஒருவராக இருப்பவர் தம்பி வைரமுத்து.  அவருக்கு இன்றைக்குச் சிறப்புச் செய்யப்படுகிறது.  அவருடைய பாடல்கள் ஆயிரத்தை எட்டி - அதைத் தாண்டி மேலும் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை எண்ணும்போது, நானே அந்தப் பெருமையைப் பெற்ற அத்தகைய நிலையை எய்துகின்றேன்.

அவரை இன்றைக்கு நான் பாராட்டுவதற்கு வரவேண்டும் என்று அழைக்கப்பட்டபோது, எனக்கு ஒரு மிக முக்கியமான வேலை.  விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை - அது முதலமைச்சருடைய கடமை.  அதற்குச் செல்லாமல் இங்கே வந்து விட்டேன் என்றால் என்ன பொருள்?  நான் முதலமைச்சராக இருக்கலாம்.  ஆனாலும், முதலமைச்சரைவிட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து,  அந்தத் தமிழுக்குப் பெருமையைத் தரக்கூடியவன்.

புலவர் ஒருவருக்கு சேரமான் இரும்பொறை என்ற மன்னன் கவரி கொண்டு விசிறினார் என்ற இலக்கியம் எல்லாம் உங்களுக்குத் தெரியும் - அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  மோசிகீரனார் என்று ஒரு புலவர்.  அவர் தன்னுடைய நிலையை உணர்த்தி, பொருள் பெற அல்லது உதவி பெற அரசரை நாடுகிறார்.  அப்படி அரசனைக் காணச் செல்லும்போது, அரசர் அரண்மனை யிலே துhங்கிக் கொண்டிருக்கிறார்.    அங்குள்ள விதி என்னவென்றால் -  அங்கே ஒரு முரசு கட்டில் இருக்கும்.   அதிலே போர் முரசு, மங்கல முரசு எல்லாம் வைக்கப்பட்டிருக்கும்.   அந்த முரசுக்கு யார் இடையூறு செய்து, அதை அகற்றினால்,  அல்லது முழங்கினால் -  யார் என்று பார்த்து அவருடைய தலையை வெட்டுகின்ற பழக்கம் அந்த சேரமான் இரும்பொறை மன்னருடைய அரண்மனையிலே இருந்தது.

புலவர் அரண்மனைக்குச் சென்றார், அரசர் உறக்கத்திலே இருக்கிறார் என்றதும்,  வந்த களைப்பில் தானும் உறங்கலாமே என்று சுற்றுமுற்றும் பார்த்தார்.   எதுவும் தெரியவில்லை.   முரசு மாலையிடப்பட்டு வைக்கப் பட்டிருந்தது.   முரசிலே ஏறிப் படுத்து,  காலை வளைத்துக் கொண்டு உறங்கி விட்டார்.    இதை ஒரு வீரன் பார்த்தான்.    அரசே, அரசே என்று கத்திக் கொண்டே அரசரிடம் ஓடினான்.    என்னவென்று வீரனைப் பார்த்து அரசர் கேட்டார்.  நம்முடைய முரசு கட்டிலில் ஒரு மனிதன் படுத்திருக்கிறான் என்று கூறினான்.   இவன் எண்ணினான் - இதைக் கேள்விப்பட்டதும் அரசர் வாள் கொண்டு முரசில் படுத்தவனை வெட்டி விடுவான் என்று!   ஆனால் சேரமான் இரும்பொறை வந்து பார்த்தான்.   முரசு கட்டிலில் படுத்திருப்பது மோசிகீரனார் என்ற புலவர் என்று தெரிந்ததும், அய்யோ பாவம் களைத்துப் போய் வந்திருக் கிறாரே என்று விசிறி கொண்டு வந்து புலவருக்கு விசிற ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் கழிந்ததும், துhங்கிக் கொண்டிருந்த புலவர் எழுந்து, என்ன மன்னா, இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டார்.   அதற்கு மன்னர், இல்லையில்லை,  இது நான் தமிழுக்குச் செய்கின்ற தொண்டு என்று சொன்னார். அதைப் போலத் தான் இங்கே பிரதமர் வருகிறார் என்றாலுங்கூட -  அங்கே செல்லாமல் இந்த “மன்னன்”  இங்கே வந்ததற்குக் காரணம் - தமிழுக்குச் செய்கின்ற தொண்டு -  தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

வாழ்த்தியவர்கள் இன்னும் பல பாடல்களை வைரமுத்து தீட்டிட வேண்டும், எழுதிட வேண்டுமென்று கேட்டார்கள். நானும் அந்த விழைவினை வெளிப்படுத்தி,  அவருக்குப் பெருமை சேர்க்கின்ற உங்களோடு சேர்ந்து, நானும் பெருமை சேர்க்க விரும்புகிறேன்.   இன்றையதினம் இந்த விழாவிலே தான் பெருமை சேர்க்க வேண்டுமென்று இல்லை.   இதைவிட அதிகப் பெருமைகளைப் பெற்றவர் அவர்.  எத்தனையோ விருதுகளை - தேசிய விருதுகளை ஐந்து முறை பெற்ற ஒரு கவிஞர் என்றால்,  அவர் தான் நம்முடைய வைரமுத்து என்பதை மறந்து விட முடியாது.    அப்படிப்பட்ட கவிஞரை -  தேசிய விருது பெற்ற கவிஞரை -  தமிழக அரசின் விருதுகளை பெற்ற கவிஞரை -   பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞரைப் பாராட்டி மகிழ்வதிலே - அவருடைய குடும்பத்திலே ஒருவன் என்ற முறையிலே - அவர் இங்கே சொன்னாரே,  “தமிழ் ஆசான்”  என்று;  “ஆசான்”  அல்ல -  நான் அவருக்கு என்றென்றும் “துணைவனாக”  இருக்கக்கூடிய ஒருவன் என்ற முறையில் அவரை வாழ்த்துகிறேன்.

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி