தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் பொதுக் குழு இன்று (ஜனவரி 30) சென்னையில் கூடியது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், ஹாரூன் ரஷீத், ஜே.எஸ். ரிபாயி, எம். தமிமுன் அன்சாரி, குணங்குடி அனிபா உட்பட 4000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து வந்து பங்குக் கொண்டார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுவது என்ற மனிதநேய மக்கள் கட்சியின் உயர் நிலை குழுவின் முடிவிற்கு பொதுக் குழு ஏகமனதாக அங்கீகாரம் அளித்தது. திமுக ஆட்சி தமிழகத்தில் அனைத்து அம்சங்களிலும் மக்கள் விரோத அரசாக மாறியுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெற பாடுபடுவது என்றும் இப்பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 2ஜி ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் நாடாளுமன்றக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
* வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் இரும்புக் கரத்துடன் நடவடிக்கை எடுத்து ஜனநாயகம் பணநாயகமாக மாறாமல் காப்பாற்ற வேண்டும்.
* இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சட்டமியேற்றும் அவையில் உரிய பிரதிநிதித்துவம் பெற விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையில் தேர்தல் நடைபெற வேண்டும்.
* விலைவாசி உயர்வுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கையே காரணம்.
* கச்சதீவை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments