Skip to main content

தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!

ஜெயலலிதா, தொண்டர்களுக்கு இன்று (ஜனவரி 16) கடிதம் எழுதியிருக்கிறார். கடித விவரம்:

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!


ஒரு தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அவதாரம் எடுத்தது போல் வந்து உதித்த மாமணி, எத்தனை நூறு தலைமுறை நம் முன்னோர் தவம் செய்து பெற்றார்களோ என்று வியந்து பார்க்கும் அளவிற்கான தெய்வப் பிறவி, என்னுடைய அரசியல் ஆசான், நம் அன்புக்குரிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 94-ஆவது பிறந்த நாளில், அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பூரிப்படைகிறேன். தமிழர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நம்முடைய அன்புத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் என்பது எண்ணற்ற சிந்தனைகளையும், பல உணர்ச்சிப் பூர்வமான அனுபவங்களையும் நெஞ்சில் மலரச் செய்யும் நாள்.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்களின் மனதில் நிற்பவர் யார்"

என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "எம்.ஜி.ஆர்." என்றுதான் பதில் வரும். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். தன்னிகரற்ற மனிதராக, பல்துறை வல்லுநராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றி வாகை சூடும் சாதனையாளராக, இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது என்று அவருடைய எதிரிகளும் தங்கள் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சரித்திர நாயகனாக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது.  கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது. சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது. அவருக்குத் தெரியாதது ஒன்றே ஒன்றுதான். அது, அடுத்தவர்களைக் கெடுப்பது.

வரலாற்றை கி.மு., கி.பி. என்று பிரிப்பதைப் போல, சுதந்திர இந்தியாவின் அரசியலையும், ஆட்சி முறையையும் எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.  எப்படி என்கிறீர்களா? எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன் வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன. இன்றைக்கும் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனை மையமாகக் கொண்ட திட்டங்கள். இனி, எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத்தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்;
இது போன்ற திட்டங்களைத்தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு வரலாற்றையே எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின் என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.  அவர் கூறிச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும்தான் எனக்கும் முன்மாதிரி.

எம்.ஜி.ஆர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழ்ச் சமூகத்திற்கு என்னவெல்லாம் தொண்டு ஆற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காகத்தான் இந்த மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். என்னுடைய கரங்களில் விட்டுச் சென்றார். இந்த இயக்கத்திலேயே இருந்து கொண்டு எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் பதவிகளைப் பெற்று அவர் முதுகில் குத்தியவர்கள், அவர் வழி வந்த என்னை அழிக்கவும் துடித்தார்கள். அவர் வாழும் நாளெல்லாம் அவரை எதிர்த்த தீய சக்திகள் என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது மட்டுமல்லாமல் முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என்று எண்ணற்ற கொடூர சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். ஆட்சியை, அதிகாரத்தை, படை பலத்தை, பண பலத்தைப் பயன்படுத்தி என்னையும், இந்த இயக்கத்தையும் அழித்துவிட திட்டமிடுகின்ற எதிரிகளின் சவால்களை எதிர்கொண்டு, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் உறுதுணையோடு இந்த இயக்கத்தை நான் வெற்றிப் பாதையில் வழிநடத்தி வருகிறேன்.

தீய சக்தியின் ஆட்சி நடைபெறுகின்ற போதெல்லாம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் வளங்கள் அனைத்தும் சுரண்டப்படுகின்றன.  தமிழக அரசின் கருவூலம் காலி செய்யப்படுகிறது.  கணக்கற்ற கோடிகள் கடனாக வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பெரும் சோதனைகளுக்கு இடையே ஆட்சி நம் கைகளுக்கு வருகிறது. கடந்த காலத்தில் அத்தனை நிதி நெருக்கடியிலும், எம்.ஜி.ஆரின் மனிதாபிமான அரசியல் பாடத்தை மனதில் கொண்டு உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினேன்.

மேல் நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச சைக்கிள் திட்டம், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ -மாணவியருக்கும் இலவச பாடநூல் திட்டம், சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கின்ற புதிய வீராணம்  குடிநீர்த் திட்டம், ஆலயங்களில் அன்னதானத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம், விரிவான தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மழைநீர் சேகரிப்புத் திட்டம்,  உறுதியான சட்டம் ஒழுங்கு, கட்டுக் கோப்பான சமூகப் பாதுகாப்பு என்று நல்லாட்சி வழங்குகின்ற வாய்ப்பினை தமிழக மக்கள் எனக்கு அளித்தார்கள்.

ஆனால் கடந்த நாலரை ஆண்டுகளாக, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, நில அபகரிப்பு, கள்ளச் சாராயம் என பல்வேறு ஊழல்களிலும், மக்களைச் சுரண்டும் செயல்களிலும் ஆளும் திமுக-வினர் ஈடுபட்டு தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிட்டார்கள். இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக உலக அரங்கில் தமிழன் தலை குனியும் வகையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையில் இமாலய ஊழல் புரிந்து மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தை தங்கள் தனிச் சொத்துக்களாக மாற்றிக் கொண்டார்கள்.  இவர்களுடைய கொட்டம் என்றைக்கு அடங்கும் என்று  இந்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

தீய சக்தியின் ஆட்சியை விரட்டவும், எம்.ஜி.ஆரின் இயக்கத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தவும் தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்த நன்னாளில்
உளமார உறுதியேற்போம்.

நம்மை அச்சுறுத்தியும், வாக்காளர்களை மிரட்டியும், தேர்தலில் தில்லு முல்லுகள் செய்தும், முறைகேடுகள் பலவற்றை நடத்தியும், ஜனநாயகத்தை சீர்குலைக்க நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அத்தனையையும் தவிடு பொடியாக்கி, தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர். வழி வந்த நல்லாட்சியை வழங்குகின்ற கடமை நம் அனைவர் முன்பும் இருக்கிறது. அந்தப் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாதவை. உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருந்து கழகத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆர்வத்தோடு தொண்டாற்றுங்கள்! அனைவரும் ஒற்றுமையாய் செயல்படுங்கள்! எம்.ஜி.ஆர். ஆட்சியை மலரச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள்! அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!

 -   உங்கள் அன்புச் சகோதரி, ஜெ ஜெயலலிதா

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி,