Skip to main content

தி.மு.க. ‍காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 13) வெளியிட்ட அறிக்கை:

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான பாதையில் செல்வது போல் தோற்றமளித்தது. இந்த ஊழல் குறித்த கடுமையான அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் முன்பு இந்தியாவின் உயரிய தணிக்கை அமைப்பான, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் கைபேசி சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இமாலய ஊழலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது குறித்து விசாரணை செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை ஏன் அஞ்சுகிறது என்று கேள்வி எழுப்பியது. மத்திய புலனாய்வுத் துறை தனது பங்கிற்கு இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் 40-க்கும் மேற்பட்ட இடங்களை ஒரே நாளில் சோதனை செய்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. டெல்லியைச் சேர்ந்த அரசியல் தரகர் நீரா ராடியாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதே போன்று, இந்த சர்வதேச ஊழலுக்கு முதற்காரணமாக விளங்குபவரும், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ஆண்டிமுத்து ராசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணிக்கிறது என்பதால் இதில் சம்பந்தப்பட்டவர்களை மத்திய புலனாய்வுத் துறை விரைவில் கைது செய்யும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற பொதுவான கருத்து நிலவியது.

ஆனால், இந்த நிலை நான் சொன்னது போல இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தது. 2.1.2011 அன்று பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்திருந்தார்.  ராசா தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனைகளுக்குப் பிறகு தன்னுடைய தேசிய கூட்டணி கட்சி மீது அதிருப்தியில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிய தி.மு.க. தலைமை, காங்கிரசுக்கு எதிராக வாளை வீசுவது போல் அசைத்து, பிறகு காங்கிரசுடன் தனக்குள்ள உறவை முறித்துக் கொள்வது எந்த வகையிலும் பயன் அளிக்காது என்று முடிவு செய்தது. இதனையடுத்து கருணாநிதி சராணாகதி அடைந்தார், மண்டியிட்டார். கருணாநிதி - மன்மோகன் சிங் சந்திப்பு நடந்தது.  இந்தச் சந்திப்பிற்கு பிறகு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்திய நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தி, நாட்டின் சொத்தை இணைந்து சுருட்டிய இரு கட்சிகளின் உறவும் கெடாமல் இருக்கிறது என்று கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் தனித்தனியாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இதற்குப் பின், அனைத்தும் மாறின.

இதற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு உள்ளாகவே, உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லக்கூடிய வகையில், இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத துறைத் தலைவரின் அறிக்கை முற்றிலும் தவறானது என்று தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் அபத்தமாக பேசினார். இது மட்டுமல்லாமல், ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது இந்த நாட்டிற்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்ததோடு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 1,50,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்றும் கபில் சிபல் தெரிவித்தார். தன்னுடைய வழக்கறிஞர் யுக்தியைக் கொண்டு ஒட்டுமொத்த இந்திய மக்களின் காதில் பூ சுற்ற வெறிகொண்டு முயற்சி செய்கிறார் கபில் சிபல்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்வது முடிவாகிவிட்ட நிலையில், ராசா அப்பழுக்கற்றவராகிவிட்டார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணை என்பது புஸ்வாணமாகிவிட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணைகளில் கிடைத்த விவரங்கள் அனைத்தும் யாரையும் கைது செய்வதற்கு வழி வகுக்கவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த கணக்கு மிகவும் சரியான மற்றும் காலத்திற்கேற்ற அடிப்படையில் துல்லியமாக கணிக்கப்பட்டது என்ற இந்திய கணக்கு மற்றுத் தணிக்கைத் துறையின் கருத்து மதிக்கப்படாத ஒன்றாகிவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தணிக்கை அமைப்பின் அதிகாரம் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டிருக்கிறது.  இந்த இமாலய ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை நிராகரித்ததோடு,  நாடாளுமன்றத்தின் ஒரு முழுமையான கூட்டத் தொடரையே முடக்கிவிட்டது. கபில் சிபல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்போ,  இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மீது விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற பொதுக் கணக்குக் குழு முன்போ தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல், பத்திரிகையாளர்கள் முன்பு வெளிப்படையாக தெரிவித்ததன் மூலம், தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.விற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பையும் காங்கிரஸ் நிர்மூலமாக்கும், தகர்க்கும்  என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் கபில் சிபல்.  2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை என்பது போபர்ஸ் விசாரணை வழியில் சென்று கொண்டிருக்கிறது என்பதும், இதை நிகழ்த்தியவர்கள் தண்டனையிலிருந்து  தப்பிவிடுவார்கள் என்பதும் தெளிவாகிறது.

நியாயமான, நேர்மையான சிந்தனை உடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், குடிமகளும், இது குறித்து வருத்தப்படுவதற்கு காரணம் இருக்கிறது.  எந்த மாநிலத்திலும், எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, ஊழல் நிறைந்த ஆட்சியாக தன்னைத் தானே தி.மு.க. ஆட்சி அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.  வஞ்சகர்கள், ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளுடன் நேசத்துடனும், நெருக்கத்துடனும் நடந்து கொள்வதை தன்னுடைய நடவடிக்கையின் மூலம் தி.மு.க. தலைமை எடுத்துக்காட்டுகிறது.

விற்பனையாகாத தன்னுடைய திரைக் கதைகளுக்கு, கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகைகளை, பல மாநிலங்களில் குற்ற நடவடிக்கைகளை எதிர் கொண்டு கிரிமினல் வழக்குகளை சந்தித்துக் கொண்டு இருப்பவரும், லாட்டரி மாஃபியா தலைவனாக இருந்து திரைப்படத் தயாரிப்பாளரானவர் கொடுத்திருக்கிறார் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியே ஒப்புக் கொண்டு இருக்கிறார். தனது மகளுடன் நெருங்கிய தொடர்புடையவரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையால் சோதனை நடத்தப்பட்ட அலுவலகங்களின் உரிமையாளரும், எந்த நிறுவனத்தின் பெயரை மாநில அரசிற்காக நடத்தப்படும் கலாச்சார விழாவிற்கான விளம்பரங்களில் கூட பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோ, அந்த நிறுவனத்தின் உரிமையளருடன் ஒரே மேடையில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார் கருணாநிதி.  ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றில் தன் பெயரை கெடுத்துக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் தன்னை சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கொள்ளையடித்த இந்த அனைத்து ஊழல் பணத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டு,  இந்த அபாயகரமான கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களை தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறது.  தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.   இது போன்ற கிரிமினல் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்கப் பாடம் புகட்டுவது தமிழக மக்களின் கடமை.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.