Skip to main content

கருணாநிதி ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கை:

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது நிலவும் அலங்கோல நிலையை வைத்தே தமிழ்நாட்டின் அவல நிலையை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற, ஊழல் மிகுந்த, கொடுங்கோல் குடும்ப ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  தற்போது தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.


இந்தப் பேருந்துகளுக்கான டீசல் மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள ‘பங்க்’குகளில் இருந்து நிரப்பப்படுகிறது. இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விநியோகிக்கிறது.  டீசலுக்கான பணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கி காசோலை மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செலுத்தும்.  இது தான் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு முறையாக பணம் சென்று சேராததன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணம் கொடுத்தால் மட்டுமே டீசல் வழங்கப்படும் என்று தெளிவாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தெரிவித்துவிட்டது.  இதன் காரணமாக, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன.

இதன் விளைவு தான் தற்போதைய டீசல் தட்டுப்பாடு.  உதாரணமாக, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 23 கோடி ரூபாய் டீசல் பாக்கி கொடுக்க வேண்டும் என்றும், இந்தப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தஞ்சாவூர் பணிமனை ஒரு தனியார் வங்கியில் 12 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.  இதே நிலைமை தான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் நிலவுகிறது. லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகமே 18 கோடி ரூபாய் அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.  இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஏழை, எளிய மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடவடிக்கை எடுக்காமல், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சிக்கி, மத்திய புலனாய்வுத் துறையின் சோதனைக்கு ஆளாகியுள்ள, தனது மகள் கனிமொழி இயக்குநராக இருக்கின்ற, தமிழ் மையத்தின் சென்னை சங்கமத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொடுக்கிறார் கருணாநிதி. அந்த நிகழ்ச்சியை வருகின்ற 12ம் தேதி அன்று துவக்கி வைக்க உள்ளார்.  ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நெருக்கடி கருணாநிதிக்குத் தெரியவில்லை.  இதிலிருந்து முதலமைச்சர் பணியைத் தவிர மற்ற பணிகளில்தான் கருணாநிதியின் கவனம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.  சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பணம் கொடுப்பதற்கு, ‘ஸ்வான்’, ‘யுனிடெக்’ போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன.  எனவே அதைப் பற்றி கருணாநிதி ஏன் கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை.

போக்குவரத்துக் கழகங்கள் புனரமைக்கப்படும் என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  கருணாநிதியின் அகராதியில் "புனரமைப்பு" என்றால் "அழிப்பு" என்று அர்த்தம் போலிருக்கிறது.  அதனால் தான் போக்குவரத்துக் கழகங்களை அழித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்க வைத்த கருணாநிதியின் ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Comments

Mahes said…
நரிகள் அரங்கேற்றிய ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.