Skip to main content

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ.. ஜெயலலிதா அறிக்கை

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து ஜெயலலிதா இன்று (டிசம்பர் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அறிக்கை விவரம்:

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், தி.மு.க. - காங்கிரஸ் இடையே சிண்டு முடிய நான் முயற்சிப்பதாக ஒரு புனைசுருட்டு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

முதலாவதாக, “ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி
நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதே போல் கன மழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி” என்று 6.12.2010 மற்றும் 8.12.2010 தேதியிட்ட இரண்டு அறிக்கைகளிலும் நான் குறிப்பிட்டிருப்பதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ள கருணாநிதி, 6ம் தேதி அறிக்கையை எப்படித் தொடங்கினோம் என்பது கூட தெரியாமல் 8ம் தேதி அறிக்கையை தொடங்கி இருப்பதாகத் கூறி இருக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசு நிவாரண உதவிகளை வழங்காதது குறித்து 6.12.2010 அன்று தமிழில் அறிக்கை வெளியிட்டேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து 8.12.2010 அன்று ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிக்கை வெளியிட்டேன். 8.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில், “ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி நீரோ மன்னன் ...” என்ற வாசகத்தை மீண்டும் உபயோகப்படுத்தியதற்கு காரணம், தமிழகத்தில் கருணாநிதியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து தமிழ் தெரியாத மற்ற மாநில மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை இந்தத் தருணத்தில் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதை கூட ஒரு முதலமைச்சரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.

அடுத்தபடியாக, “இந்தி எதிர்ப்புப் போராட்டம்” குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. அரசியல் பதவிகளை அடைவதற்காக அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி தான், இன்று ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழினத்தையே அழித்தார். கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு என்பது ஊருக்கு உபதேசம். கருணாநிதியைப் பொறுத்த வரையில் இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று என்பதெல்லாம் வெளி வேஷம். ஆட்சி அதிகாரத்திற்காக, தன்னுடைய நிலையை காலத்திற்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளும் தன்மையை உடையவர் கருணாநிதி. கருணாநிதியின் எந்தப் போராட்டத்தையும் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை.

கடைசியாக, தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன். இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று பேசி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி பேச்சு 6.12.2010 முரசொலியில் வெளியாகி இருக்கிறது.

இதே போன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத்தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, “ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில
எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகரமாக இந்தப் பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து
76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போய்விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக் கொண்டதைப் போலவும், அதற்காக பாராளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி கேள்வி-பதில் 7.12.2010 அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது. இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு மட்டும் பங்கில்லை, மற்றவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இரண்டு முறை கூறி இருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது.இதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனால், நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில்,
“ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப் பார்ப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். நேற்றைய அறிக்கையில் ஓர் உண்மையை கருணாநிதி மறைத்துவிட்டார். அதாவது, நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில் தான் சொன்ன “ஒருவர்” என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்துவிட்டார் கருணாநிதி. பொய்யும், புளுகும், புனைசுருட்டும் கருணாநிதிக்கு கை வந்த கலை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. தனது ஆட்சி அழியப் போவதை நினைத்து பிதற்றுகிறார் கருணாநிதி. என்னதான் புலம்பினாலும், ஆட்சி வீழ்வது உறுதி.

Comments

உண்மையில் பயனுள்ள வலைபூ. தொடருங்கள்...

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...