Skip to main content

ராசாவுக்கு முன்பு இருந்தவர்களும் புனிதமான துறவிகள் இல்லை: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 17) வெளியிட்ட அறிக்கை:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 2001ம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் நான் வரவேற்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் இந்த நாட்டின் முதன்மை விசாரணை அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைபிடித்ததன் காரணமாகத்தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், விசாரணையை துரிதப்படுத்த என்ன தயக்கம்? இந்த ஊழலின் கதாநாயகரான முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை ஏன் விசாரிக்கவில்லை? என்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டபிறகுதான் தன்னுடைய நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை அண்மை காலமாக தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்தக் கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி மூன்று வாரங்கள் ஆன நிலையிலும், இதுநாள் வரை ராசாவிடம் விசாரணை நடத்தாதது, மத்திய புலனாய்வு அமைப்பு தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

மத்திய புலனாய்வுத் துறையின் இந்தச் செயல்பாடுதான், “இந்த ஊழல் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளிக்க தூண்டுகோலாக இருந்து இருக்கிறது. எனவே, மத்திய புலனாய்வு அமைப்புக்கோ அல்லது மத்திய அரசுக்கோ இதில் பெருமைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்ததோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினை முடிந்துவிடவில்லை என்று தொடர்ந்து நான் கூறி வந்துள்ளேன். இது ஓர் ஆரம்பம்தான் என்றும் கூறியிருந்தேன். இதற்குப் பிறகுதான் இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தன. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ராசா மத்திய அமைச்சராக இருந்த போது உச்சத்திற்கு சென்றாலும், முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001ம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்பதை காரணம் காட்டி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்கு உட்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலானோர் இந்த ஊழலின் பின்னணியிலும், இந்த ஊழலுக்கு துணையாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்க முடியாது. இந்த ஊழலில் உள்ள முழு உண்மையும் வெளிவர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதுதான். எனவே, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கண்காணிக்கும் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க. வலியுறுத்தும். இந்த நியாயமான கோரிக்கைக்காக அரசியல் வேறுபாடின்றி ஒத்தக் கருத்துகளை உடைய அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அ.தி.மு.க. தொடர்ந்து இணைந்து செயல்படும்.

Comments

YOGA.S said…
அதானே?என்னோட ஊழல் வழக்குகளை மட்டும் அவசர,அவசரமா விசாரிக்கிறாங்க!ராசா என்ன ராசா?அவங்களுக்கு மட்டும் என்ன கொம்பா மொளச்சிருக்கு??????????
Unknown said…
யாருதான் என்னதான் பேசுரதுன்னு இல்லை. ஒரு கொலைக்காரன் இன்னொரு கொலைக்காரனை பார்த்து அவனுக்கு தூக்கு தண்டனை கொடுன்னு சொல்ற மாதிரி இருக்கு. அட யாராவது அந்த அம்மா கிட்டே சொல்லுங்களேன் ஆமா நீங்க சொல்லித்தான் இந்த பூமியே சுத்துதுன்னு.

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.