பொதுமக்களின் திடீர் பிக்னிக் ஸ்பாட்டாக தற்போது மாறியிருக்கும் இடம் சென்னை சென்ட்ரல் ஜெயில். மத்திய சிறை புழலுக்கு மாற்றப்பட்டு விட்டதால், பழைய சிறையை இடிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அப்படி இடிப்பதற்கு முன்பு, அதை பொதுமக்களின் காட்சிக்காகக் காவல் துறை திறந்து வைத்திருக்கிறது.
நாமும் நம் பங்குக்கு 'தமிழ்த் தேசிய விடுதலை இயக்க'த்தின் பொதுச்செயலாளர் தியாகுவுடன் சிறைவலம் வந்தோம். அப்போதுதான் மேற்கண்ட 'பாரதிராஜா' நினைவுகளில் மூழ்கினார் தியாகு. ஜூ.வி-யில் 'சுவருக் குள் சித்திரங்கள்', 'கம்பிக்குள் வெளிச்சங்கள்' ஆகிய தொடர்களை எழுதிய தியாகு, இந்தச் சிறையில் பல ஆண்டுகள் அரசியல் கைதியாகஇருந்தவர்.
சிறை விசிட்டுக்கு நாம் அழைத்தபோது, ''நானே என் வீட்டில் இருப்பவர்களை அழைத்துப்போய்க் காட்டலாம் என்றுதான் இருந்தேன்...'' என்றபடி காரில் ஏறினார் தியாகு. அவருடன் முதல் வகுப்பு படிக்கும் அவர் மகன் சமரன். சிறைச்சாலைக்குள் நுழைந்தோம். ஜெயிலைக் காண தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பீடி, சிகரெட், பான்பராக், வாட்டர் பாக்கெட், சுண்டல், நொறுக்குத் தீனிகள், ஐஸ்கிரீம் விற்கும் 'திடீர்' கடைகளும் சிறைக்குள் முளைத்திருந்தன.
தியாகு முதலில், தான் அடைக்கப்பட்டிருந்த 'ம.த.கூ.' என்று எழுதப்பட்ட கட்டடத்துக்குள் போனார்.
''ம.த.கூ. என்றால் 'மரண தண்டனைக் கூடம்'. இங்குதான் என்னை முதலில் அடைத்தார்கள். ஆரம்ப காலத்தில் இந்த குவாரன்டைன்-2 பகுதியாக இருந்தது. கைதிகள் உள்ளே வரும்போது, அவர்களை சில நாட்களுக்கு இங்கேதான் வைப்பார்கள். அப்படித்தான் 1971 பிப்ரவரி மாதத்தில் ஓர் இரவு இங்கு கொண்டுவரப்பட்டேன். 72 வரை இந்த அறையில்தான் இருந்தேன். தனிமைச் சிறையின் உள்ளே பைபிள், சிலுவை போன்றவை இருந்தன. மரண தண்டனைக் கைதிகளிடம் வார்டன்கள், 'உங்கள் கடைசி விருப்பம் என்ன?' என்று கேட்பது என் காதுகளில் விழும்...'' என்று சொல்லிக்கொண்டே வந்தபோது தியாகு, முதலில் அடைக்கப்பட்டிருந்த அறை வந்தது. உள்ளே ஒரு ஆள் படுத்துக்கொள்ளும் அளவுக்கு திண்டு. பக்கத்திலேயே டாய்லெட். அந்த திண்டில் உட்கார்ந்து விட்டத்தை வெறித்தபடி பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார்.
''ஒருவர் சிறையில் இருந்ததற்கான ஆதாரப் பதிவு, சிறை ஏடுகளில் மட்டும்தான் இருக்கும். ஆனால், இப்போது புகைப்படமும் எடுக்கும் வாய்ப்பு...'' என்று சொல்லி சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நின்று படமெடுத்துக்கொண்டார். கம்பிகளை ஒவ்வொன்றாக எண்ணி, ''இதுதான்பா கம்பி எண்ணுவது...'' என்று தன் மகனிடம் சொல்ல, ''அப்பா, எதுக்கு உன்னை சிறையில போட்டாங்க?'' என்று கேட்டான் சமரன். ''போராட்டம் நடத்தினதுக்காக...'' என்று மட்டும் சொன்னார். ''போராட்டம் நடத்தினாக்கூடவா சிறையில போடுவாங்க..?'' என்று பதில் கேள்வி எழுப்பினான். அதற்கு அவரிடம் பதில் இல்லை.
|
Comments