Skip to main content

'ரகசிய' போலீஸ் 7,67,00,000 !

2008 ஆகஸ்ட் 3 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது !

'ரகசிய' போலீஸ் 7,67,00,000!

போலீஸ் என்றாலே 'மாமூல்' என்ற அர்த்தம் பொதுமக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது. பகிரங்கமாக
லஞ்சம் வாங்கும் டிராஃபிக் போலீஸ் முதல், லஞ்சப் புகாரில் சிக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் வரை என எத்தனையோ பேரை பார்த்து மக்கள் அலுத்துப் போய்விட்டார்கள்.
இந்நிலையில், ''இதையும் தாண்டி லஞ்சத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தகிடுதத்தம் எதுவும் செய்யாமல் அரசாங் கத்திடமிருந்தே லட்சலட்சமாய் போலீஸார் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்றொரு தகவலை நம்மிடம் சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நம்முடைய போலீஸ் நண்பர் ஒருவர்.
''போலீஸ் துறையில் ரகசிய தகவல்களை திரட்டுவதற் காக 'ரகசியப் பணிச் செலவு' என்ற வகையில் அரசு ஆண்டுதோறும் பணம் ஒதுக்கி வருகிறது. உளவுத் தகவல்கள் திரட்டுவது, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுக்கும் இன்ஃபார்மர்களுக்கு பணம் செலவழிப்பது போன்றவற்றுக்குத்தான் இந்தப் பணம். காவல்துறையின் மிக முக்கியமான 27 பிரிவுகளுக்கு இப்படி ரகசியப் பணிச் செலவுக்கு பணம் ஒதுக்கப்படுகிறது. இதில்தான் ஊழல் நடக்கிறது'' என்றார் அந்த நண்பர்.
கீழ்நிலை காக்கிகள் வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். ''பொதுவாக அரசாங்கத்தின் மற்ற துறைகளில் அதிகாரிகளோ, ஊழியர்களோ வெளியூர் பயணம் மேற்கொண்டால் அந்தத் தொகைக்கு உரிய பில்லோ, வவுச்சரோ இல்லாமல் அரசிடமிருந்து பணம் வாங்கிவிட முடியாது. ஆனால், போலீஸ் துறையில் இன்ஃபார்மர்கள் மூலம் சேகரிக்கும் தகவல்களுக்காக செய்யப்படும் செலவில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் கிடையாது. காரணம், ரகசியத்தைக் காக்க வேண்டுமென்பதுதான்! அதனால், ஒரு வெள்ளைத் தாளில் இவ்வளவு செலவானது என்று வெறுமனே எழுதிக் கொடுத்தாலே பணம் கிடைத்துவிடும். இதை சாதகமாக்கிக் கொண்டுதான் 'ரகசியப் பணிச் செலவு' பணத்தை போலீஸ் அதிகாரிகள் கணக்கு வழக்கு இல்லாமல் ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சோர்ஸ்களுக்கும் இன்ஃபார்மர்களுக்கும் இந்த வகையில்பணம் வழங்கப்படும். இதையும் அதிகாரிகள் விழுங்கி விடுகிறார்கள். உண்மையில், மேற்படி சோர்ஸ் களிடமிருந்து தகவல்கள் சேகரிப்பது கீழ்நிலை போலீஸ்காரர்களான நாங்கள்தான். ஆனால், எங்களுக்கு இந்தப் பணத்தில் இருந்து நயா பைசாகூட தேறாது'' என தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார்கள்.
உளவுத்துறை போலீஸாரும்கூட, ''எதிர்க்கட்சி பிரமுகர் களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சொல்வதற்கு நாங்கள் சிலரை சோர்ஸ்களாக வைத்திருப்போம். அவர் களுக்குத் தேவையான பணத்தை நாங்கள்தான் செலவு செய்வோம். ஆனால், உயர் அதிகாரிகள் இதற்கான பணத்தை தராமல் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்'' என்கிறார்கள்.
கருத்துரிமைக்கான மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு அமைப்பாளரும் சிந்தனை யாளருமான அ.மார்க்ஸிடம் இதுபற்றிப் பேசினோம். ''ராணுவம்,
'ரகசிய' போலீஸ் 7,67,00,000!
போலீஸ் போன்ற துறைகளில் 'செக்யூரிட்டி ரிலேட்டிவ் எக்ஸ்பென்ஸஸ்' என்ற அடிப்படையில் அரசாங்கங்கள் மக்கள் வரிப் பணத்தை விரயமாக்கி வருகின்றன. சட்டீஸ்கர், ஆந்திரா போன்ற மாநிலங்களில் நக்ஸலைட்களை ஒடுக்குவதற்காக பழங்குடியின மக்களுக்கு போலீஸ் யூனிஃபார்ம், துப்பாக்கி, சம்பளம் கொடுத்து ஒரு படை உருவாக்கி, அந்த மக்களுக்குள்ளேயே பிரித்தாளும் வேலையை செய்யும் போலீஸ், இதற்கும்கூட இந்தப் பணத்தைத்தான் செலவு செய்கிறது. இதனை உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. கார்கில் போர் நடந்த சமயத்தில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்டுபிடித்து தகவல் சொல்வதற்காக எல்லைப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இதை ராணுவமே சுருட்டிக்கொண்டது. இந்த ஊழலால்தான் பாகிஸ்தான் படை ஊடுருவல் நடந்தது. இப்படி ஊழல் நடக்க அரசாங்கமே நிதி ஒதுக்குவது அயோக்கியத்தனம்'' என்கிறார் அ.மார்க்ஸ்.
'ரகசியப் பணிச் செலவு' சர்ச்சை பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது வெளிப்படையாக பேச மறுத்துவிட்டனர். பெயர் வெளியிட விரும்பாமல் நம்மிடம் பேசிய சிலர்,
''சமீபத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் இரும்பு ஆலைகளில் புதைந்திருந்த ஆயுதக் குவியல்களைக் கைப்பற்றி போலீஸ் நடவடிக்கை எடுத்ததே, முக்கியமான இன்ஃபார்மர்கள் கொடுத்த தகவலால்தான். ரகசியப் பணி செலவுப் பணத்தை ஏப்பமிடும் அதிகாரிகள் ஒரு சிலர் இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த துறையையும் குறை சொல்வது தவறு. சில இடங்களில் போலீஸே அமைதிக் கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை விழாக்கள் என்று நடத்துவது வழக்கம். இதற்கான செலவையெல்லாம்கூட 'ரகசியப் பணிச்செலவு' பணத்திலிருந்துதான் எடுக்கிறோம். போலீஸ் ஸ்டேஷனுக்குத் தேவையான பேப்பர் போன்ற பொருட்கள் வாங்குவது, குண்டாஸ் போடுவதற்காக டாக்குமென்ட்கள் தயாரிப்பது, கைதிகளுக்கு சாப்பாடு போடுவது போன்ற செலவுகளுக்குக்கூட இந்தப் பணம்தான் பயன்படுகிறது'' என்றார்கள்.
'ரகசிய' போலீஸ் 7,67,00,000!
ஆனால், இதற்கும் போலீஸ் துறைக்குள்ளேயே பதில் கிடைக்கிறது. ''இது எல்லாம் சுத்தப் பொய். ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க வருபவர்களிடமே பேப்பர் போன்ற பொருட்களை வாங்கிவிடுகிறார்கள். கைதிகளின் உறவினர்களை விட்டே சாப்பாடு வாங்கி கொடுக்கப்படுகிறது'' என்கிறார்கள் சட்டம்- ஒழுங்கில் இருக்கும் கீழ்மட்ட காக்கிகள்.
ரகசியப் பணிச் செலவுக்கு அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு? கோட்டையில் நிதித்துறை வட்டாரத்தில் தகவல் திரட்டினோம். நமக்குக் கிடைத்த பட்டியலைப் பார்த்தபோது தலை சுற்றியது.
அரசின் கணக்குப்படி 2004-2005-ம் ஆண்டில் 9 கோடியே 47 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயும், 2005-2006-ம் ஆண்டில் 7 கோடியே 18 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், 2006-2007-ம் ஆண்டில் 8 கோடியே 46 லட்சத்து 19 ஆயிரம்
'ரகசிய' போலீஸ் 7,67,00,000!
ரூபாயும்... 2007-2008-ம் ஆண்டில் 7 கோடியே 58 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயும், நடப்பு நிதியாண்டான 2008-2009-ம் ஆண்டில் 7 கோடியே 67 லட்சம் ரூபாயும் இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. (விரிவான புள்ளிவிவரங்கள் பட்டியலில்!). நம்மிடம் பேசிய நிதித்துறை அதிகாரிகள், ''இப்படி கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்தும் போலீஸ் எதைக் கண்டுபிடித்தது? சிவகங்கை சேர்மன் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கொலை செய்யப்பட்டது, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வெட்டி படுகொலையானது என எதையுமே மோப்பம் பிடித்து போலீஸ் முன்கூட்டியே தடுக்கவில்லையே? வன்னியர் சங்கத் தலைவர் 'காடுவெட்டி' குரு காட்டமாக பேசிய பேச்சுகூட கட்சிக்காரர் ஒருவர் கொடுத்த சி.டி-யால்தானே அரசுக்குத் தெரியவந்தது... ரகசிய தகவல்களுக்கு என இவ்வளவு பணத்தை விழுங்கிய போலீஸ் என்ன செய்தது? இத்தனை வாரமாய் சென்னையை உலுக்கும் சைக்கோ கொலைகாரனைப் பற்றி அறிய போலீஸ் இந்தப் பணத்தைப் பயன்படுத்தவில்லையா? இவ்வளவு பணத்தை கேள்வியில்லாமல் போலீஸ§க்கு அழுவதற்கு பதில் வேறு மக்கள் நல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்'' என்கிறார்கள்.

மொத்தத்தில் 'ரகசியப் பணிச் செலவு' என்றொரு ரகசிய உலகத்தில் போலீஸார் உல்லாசமாய் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டும் நிஜம்!

- எம்.பரக்கத் அலி

கட்டுரை லிங்க்: 
https://www.vikatan.com/news/crime/47951--2

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)