திருச்சி பகுதியில் லால்குடி அருகே சாலையோரம் மரத்தடியில் இளநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் சர்வே பேப்பரை நீட்டினோம். வாங்கி முழுக்கப் படித்துப் பார்த்தவர், ''ஏங்க காடுவெட்டி குரு மட்டுமா இப்படி பேசறாரு? கொஞ்ச நாள் முன்னாடி தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான் மீட்டிங் போட்டிருந்தாங்க. என் மகளைக் கூட்டிக்கிட்டு அந்த இடத்தை தற்செயலாக் கடந்துபோனேன். காது கூசுச்சு... அவ்வளவு ஆபாசமா பேசுனாரு. குரு பேசினது தப்புன்னா, இதுவும் தப்புத்தானே?'' என்றார்.
திருச்சி மாநகரில் நம்மை சூழ்ந்துகொண்ட ஆட்டோ டிரைவர்கள், ''ஜூ.வி-யா? வாங்க வாங்க..! என்ன... இதுவரை அய்யாவோட கைகுலுக்கி பேசிக்கிட்டிருந்த ராமதாஸ், இப்ப அம்மாகிட்ட கைக்கட்டி நிக்கப் போறாரா? கேட்டுச் சொல்லுங்க'' என்றபடியே சர்வே கேள்விகளுக்கு 'டிக்' அடிக்க ஆரம்பித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்டார கிராமத்தினர் ஒரு முடிவுக்கே வந்துவிட்டார்கள். ''விஜயகாந்த்தைக் கூட்டணிக் குள்ள கொண்டாறதுக்குதான் இப்ப திடீர்னு ராமதாஸை கலைஞர் கழட்டிவிட்டுட்டாரு... விஜயகாந்த்து எப்ப வருவாருங்க... உங்ககிட்ட ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்களேன்...'' என ஆர்வமாக நம்மிடம் கேட்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு பகுதியைச் சேர்ந்த பூவாயி என்பவரும், இதே மன நிலையைத்தான் பிரதி பலித்தார். ''அது சரிங்க... ஒரு கேள்விய விட்டுட்டீங்களே..? ராமதாஸ் போயிட்டாரே, அடுத்தது விஜயகாந்த்துதானே வருவாரு? இதைப்பத்தி கேக்கவே காணோம்?'' என நமக்கு கேள்வி போட்டார் பூவாயி.
திருப்பத்தூர் பகுதி மக்கள், ''ராமதாஸ் நல்ல எதிர்க்கட்சியாத் தான் இருந்தார். ஆனா, தேவையில்லாம எதிரிக்கட்சி யாவும் ஆயிட்டார். அதான் கூட்டணியை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க...'' என் கிறார்கள்.
மதுரை பாண்டிகோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் சர்வே டீம் போனபோது, ''என்ன தம்பி, கூட்டணி கீட்டணினு கேக்க வந்துட் டீங்க... எல்லாம் தில்லுமுல்லு பண்றாங்க. கூட்டணியே இல்லாம விஜயகாந்த் சொல்ற மாதிரி எல்லாரையும் தனியா நிக்கச் சொல்லுங்க, பாப்போம். அப்பதான் இதுபோல பிரச்னையெல்லாம் வராது...'' -ரெண்டு முழம் பூவை நாலு முழமாக அளந்து கொடுத்தபடியே நம்மிடம் கருத்து உதிர்த்தார்.
விருதுநகர் பக்கம் சர்வே ஷீட்டும் பேனாவுமாக நம்மைக் கண்ட பலரும், ''பா.ம.க-வை தி.மு.க. கழட்டிவிட்டது சரிதான்'' என்று சொல்லிவிட்டு கூடவே, ''தி.மு.க. ஆட்சியை இன்னும் பலப்படுத்திக்கணும்னா ஒரு காரியம் செய்யணும். அமைச்சரவையில காங்கிரஸ§க்கும் இடம் கொடுக்கணும். அப்படிச் செஞ்சா, காங்கிரஸ§க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்'' என்றனர்.
மதுரையைத் தாண்டி திருநெல்வேலி பக்கம் சென்றால்... அங்குள்ள பல கிராமமக்களுக்கு காடுவெட்டி குரு என்றால் யார் என்றே தெரியவில்லை. அவரைப் பற்றிய முன்குறிப்பு கொடுத்துவிட்டுத்தான் நாம் சர்வே ஷீட்டை நீட்டமுடிந்தது. அதோடு, மக்களிடம் இன்னொரு சந்தேகக் கேள்வி சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. ''ஏம்லே... கலைஞர் ஆட்சி கவுந்துடாதுல்ல?'' என்பதுதான் அந்தக் கேள்வி. இதையே நிறைய பேர் நம்மிடம் கேட்டனர்.
இதேபோல்தான் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும். அந்த மாவட்ட மக்களுக்கும், காடுவெட்டி குரு யார் என்றே தெரியவில்லை.
தலைநகரம் சென்னையில் சர்வே டீம் பல பிரிவுகளாகக் களமிறங்கி மக்களை சந்தித்தபோது, பல கருத்துகளை வெளிப்படுத்தினர்.
''இன்னாப்பா சர்வே எடுக்க வந்துட்டே... ஏழைங்க இருக்க வூடு கிடைக்க மாட்டுது... தம்மாத்தூண்டு அய்யர் ஹோட்டல்ல நாஸ்தா பண்ணப் போனாலே தோசை பதினேழு ரூபான்றான்... இதப்பத்தி சர்வே எடுய்யா... கூட்டணி இருந்தா இன்னா? முறிஞ்சா இன்னா?'' என நம்மை வறுத்தெடுத்தார் ராயப்பேட்டை அமீர் மஹால் அருகே நாம் சந்தித்த ஒரு முதியவர்.
|
Comments