ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல், தன் பிரசாரத்தைத் தமிழகத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார். பிரதீபா பாட்டீலை ஆதரித்து சென்னையில் தி.மு.க. கூட்டணி சார்பில் மகளிர் பேரணியும் நடந்து முடிந்திருக்கிறது. ஜூலை 1-ம் தேதி அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் வரையில் நடந்த இந்தப் பிரமாண்ட பேரணிக்கு, மதியத்தில் இருந்தே பெண்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். ஊர்வலத்தை பிரதீபா பாட்டீல் பார்வையிடுவதற்காக, சிம்சன் அருகே ஒரு ஸ்பெஷல் மேடை அமைத்திருந்தார்கள். ‘ராஷ்டிரபதி பவன்’ மாடலில் அந்த மேடையை அமைக்க ஐடியா கொடுத்தது கருணாநிதிதானாம். இந்த மேடையை முந்தின நாள் இரவு வந்து பார்வையிட்டார் கருணாநிதி. ராஷ்டிரபதி பவன் மாடலின் கோபுரத்தில் கருணாநிதிக்குப் பிடித்த மஞ்சள்(!) நிறத்தில் கொடி பறந்து கொண்டிருந்தது. சரியாக மாலை 4.50-க்குக் கருணாநிதியின் கார் மேடை அருகே வந்து நின்றது. உடனே இறங்காமல் சிறிது நேரம் காரிலேயே காத்திருந்தார் கருணாநிதி. அடுத்த சில வினாடிகளில் பிரதீபா பாட்டீலை மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அழைத்துவந்தனர். பிரதீபா பாட்டீல் வந்ததும் காரைவிட்டு இறங்கிய கருணாநிதி, அவரை வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தார். மேடையில் கருணாநிதிக்கும் பிரதீபாவுக்கும் மட்டுமே ஸீட் போட்டிருந்தார்கள். மேடைக்குப் பக்கத்தில் இருந்த சிறிய மேடையில் முன்வரிசையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமர வைக்கப்பட்டனர். பின்வரிசையில் ஸ்டாலின், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், பிரதீபாவின் உறவினர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்திருந்தார்கள். தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் என்று கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் பேரணியில் திரண்டு வந்திருந்தனர். ஆனால் பா.ம.க-வினர் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. |
Comments