மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில், எம்.ஜி.ஆர் ஆகிய 10 பேர் படங் களுக்கு மட்டும் தமிழக சட்டசபையில் நிரந்தர இடம் உண்டு. இந்த வரிசையில் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் வைக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து, 'கருணாநிதியின் படத்தை வைக்கக் கூடாது' என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கும் ஜெயலலிதா, ''அடுத்து அதி.மு.க. ஆட்சிக்கு வரும்போது இந்த மரபுமீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும்!'' என்றும் காரம் வீசியிருக் கிறார்.
இதுபற்றி சட்டசபை செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''சட்டசபையில் முதன்முதலாக காந்தி உருவப்படத்தை, ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 24.7.1948-ல் திறந்து வைத்தார். 'வாழ்க நீ எம்மான்' என்கிற பாடலை எம்.எஸ்.சுப்பு லட்சுமி பாட... சர்.முத்தையா செட்டியார் வழங்கிய காந்தி படம் திறக்கப்பட்டது. பிறகு ராஜாஜியின் படத்தை பிரதமராக இருந்த நேரு திறந்தார். அதைத்தொடர்ந்து, திருவள்ளுவர் படத்தை 22.3.1964-ல் அப்போதைய துணை ஜனாதி பதி ஜாகீர் உசேன் திறந்தார். அண்ணா முதல்வராக இருந்தபோதே மறைந்துவிட... முதல்வராக அமர்ந்த கருணாநிதி, 1969-ம் ஆண்டு
பிப்ரவரி 10-ம் தேதி அண்ணாவின் உருவப்படத்தை பிரதமராக இருந்த இந்திரா காந்தி திறந்துவைத்தார். காமராஜர் படத்தை 18.8.77-ல் ஜனாதிபதியாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சட்டசபையில் திறந்தார். பெரியார், அம்பேத்கர், பசும்பொன் தேவர், காயிதேமில்லத் ஆகியோரின் படங்கள், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 9.8.80-ல் கேரள கவர்னர் ஜோதி வெங்கடா சலத்தால் திறக்கப்பட்டன. ஜெயலலிதா முதல் முறை முதல்வரானபோது, 31.1.92-ல் எம்.ஜி.ஆர் படம் திறக்கப்பட்டது. இதில், உயிருடன் இருந்தபோது படம் திறக்கப்பட்ட ஒரே தலைவர் என்றால்... அது ராஜாஜிதான். இப்போது அந்த வரிசையில் கருணாநிதியும் சேரப் போகிறார்...!'' என்றார்கள்.
அ.தி.மு.க. முன்னணித் தலைவர்களிடம் பேசியபோது, ''சட்ட சபையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக கடந்த 2007-ம் ஆண்டில் சட்டசபையில் கருணாநிதியின் பொன்விழாவை கொண்டாடினார்கள். அதற்கே சில எதிர்ப்புகள் தெரிவித்தோம். இப்போதும் அதே காரணத்தை சொல்லித்தான் கேபினெட் மீட்டிங்கில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அவர் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு எம்.ஏல்.ஏ-வாக இருந்தது கிடையாது என்பதுதான் சரியான விவரம். 1984, 1991-ம் ஆண்டுகளில் ஜனநாயக கடமையை ஆற்றாமல், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்கே வரவில்லை. அ.தி.மு.க கணக்குப்படி, அவர் 38 ஆண்டுகள்தான் சட்டசபையில் கழித்திருக்கிறார். அப்படியிருக்க அவருக்கு படத் திறப்பு மூலம் சிறப்பு செய்வதை ஏற்கமுடியாது..'' என்றார்கள்.
தி.மு.க. அமைப்பு செயலாளரும் எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் நம்மிடம், ''சட்டசபையில் முன்பு எம்.ஜி.ஆர். படத்திறப்பு விழா நடந்தபோது, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த ஜெயலலிதா இப்போது மரபைப் பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதக்கூடாது..! அதே விழாவில் துணை சபாநாயகர் இருக்கையில், தோழி சசிகலாவை உட்கார வைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவர், கலைஞரின் படத் திறப்பு பற்றி கேள்வி கேட்கவே தகுதியில்லாதவர். 1957-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார் கலைஞர். 'நான் ஆட்சிக்கு வந்தால் படத்தை நீக்குவேன்' என்று சொல்வது, பொறாமையின் வெளிப்பாடு; அற்பச் செயல். சட்டமன்ற சரித்திரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி சிறப்பு சேர்த்து வரும் கலைஞரின் படத்தைத் திறக்க எல்லா தகுதியும் உண்டு!'' என்றார்.
| |
|
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்
Comments