Skip to main content

பிறை (முஸ்லிம் லீக்) சூரியனை (தி.மு.க.) விட்டு அகலாது: கருணாநிதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு இன்று (டிசம்பர் 11) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை :

தி.மு. கழகமும் இஸ்லாமியர்களுடைய பாசறையாக விளங்குகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக நெருங்கிய உறவு கொண்ட சமுதாய, அரசியல் பேரியக்கங்கள் என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள். இங்கே நம்முடைய விழாத் தலைவர் - மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பட்டத்தை, விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார்கள்.


 அந்த விருதைப் பெறும்போது, எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன் நான் என்ற வரியை அந்த வாழ்த்திலே வார்த்தையாக பொறித்திருக்கிறார்கள். அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் அந்த வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ - என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது.

பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் - மன்னிக்க முடியாத குற்றம். அந்தக் குற்றத்தைச் செய்து எனக்கு இந்த விருதினை வழங்கியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டு கிறேன். இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது என்பது எனக்குத் தெரியும். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை அவர் நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால்தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல - படித்து முடித்த பிறகும்கூட - எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா; என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒருவேளை அவர் இன்னொரு விழா நடத்தி அதில் காயிதே மில்லத்தினுடைய பெயரையும் சேர்த்து உங்களுக்கு வழங்குகிறோம் வாரீர் என்று சொன்னாலும் சொல்லுவார். காயிதே மில்லத்தினுடைய பெயரை சேர்ப்பதாக இருந்தால், இன்னொரு விழா அல்ல - இன்னும் நூறு விழாக்கள் நடத்தினாலும் நான் வருவதற்குத் தயாராக இருப்பவன். அந்த அளவுக்கு காயிதே மில்லத் அவர்களிடத்திலே அன்பு - அவரிடத்திலே பற்று - பாசம் இவற்றை பெரியார் காலத்திலிருந்து நாங்கள் கொண்டவர்கள்.

இதே பகுதியிலேதான் காயிதே மில்லத் அவர்கள் வாழ்ந்த இல்லம் இருந்தது. அவர்களைக் காண என்னையும், நண்பர்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அனுப்புவார்கள். நாங்கள் வந்தால் அவர்கள் இல்லத்து வாசலிலே நின்று ஒரு நிமிடம் காக்கக்கூடத் தேவையில்லை; அடுத்த நிமிடத்தில் காயிதே மில்லத் அவர்கள் அவர்களுடைய இல்லத்திலிருந்து வெளியே வந்து எங்கள் பக்கத்திலே நின்று எங்களை அரவணைத்து, ஆரத்தழுவி உள்ளே அழைத்துச் செல்வார்கள்.

அப்படிப்பட்ட இனிய பண்பும், அரிய சுபாவமும், தமிழ்ப் பண்பாடும் நிறைந்தவர் மறைந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் ஆவார்கள். அவர் கட்டிக் காப்பாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு காலத்திலே அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயரோடு விளங்கி, பாகிஸ்தான் பிரிந்த பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கின்ற பெயரை இட்டழைத்த பெருமை நம்முடைய மறைந்த, என்றும் மறையாமல் இருக்கின்ற காயிதே மில்லத் அவர்களுக்குத்தான் உரியது.

அப்படிப்பட்ட பெரிய தலைவர், நாங்கள் எல்லாம் பெருமைப்படத்தக்க தலைவர், வணங்கத்தக்க தலைவர், நாங்கள் எல்லாம் வழிபடத் தக்கத் தலைவர் - நாங்கள் எந்த வழியில் நடக்க வேண்டும் என்று கருதினாலும் அண்ணாவும், பெரியாரும், காயிதே மில்லத்தும் நடந்த அந்த வழியில் நடந்தால்தான் நல்லிணக்கம் நாட்டிலே ஏற்படுத்த முடியும் என்பதை நாங்கள் உணர்ந்து நடந்தவர்கள்.

இதற்கிடையே ‘நல்லிணக்க நாயகர்’ என்கின்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. பல பெயர்கள், பல பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான் இந்தப் பட்டங்களையெல்லாம் தூக்கிக் கொண்டு, அலையப் போவதுமில்லை. இந்தப் பட்டங்களை வைத்துக் கொண்டு, ‘‘பார் - பார் ; எத்தனை பட்டங்கள்!’’ என்று பெருமைப்படப் போவதுமில்லை.
ஆனால், பட்டங்களை அளித்தவர்கள் என்ன உள்ளத்தோடு, எத்தகைய நம்பிக்கையோடு இதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அவர்களுடைய உள்ளமும் மகிழ்கின்ற அளவிற்கு நடந்து காட்ட விரும்புகின்றவன் நான். அப்படி நடந்து காட்டுவேன் என்பதை இந்த நேரத்திலே, இந்த மாபெரும் மாநாட்டிலே உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த மாநாட்டில் சில கோரிக்கைகள் வைக்கப் பட்டுள்ளன. அவைகளையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். மாநாட்டுத் தலைவர் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையோடுதான் நீங்கள் இந்தத் தீர்மானங்களையெல்லாம் இன்றைக்கு எனக்கு அளித்திருக்கிறீர்கள்.
முதல் தீர்மானம் - சமச்சீர் கல்வியில் உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற தீர்மானமாகும்.
மொழிக்கு பாதுகாப்பு வேண்டும். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருந்த இயக்கம் இந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படி எங்கள் மொழிக்கு நாங்கள் போராடி வெற்றி கண்டபோது, இது உங்கள் மொழி என்று சொல்ல மாட்டேன். “நமது” மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்கு உரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு அல்ல - இன்றைக்கு இந்த அரசு இருக்கலாம், நாளைக்கு வேறு அரசு வரலாம். அது உங்களுடைய ஆசை. 40 ஆண்டுகள் நான்தான் முதலமைச்சராக இருப்பேன் என்று இங்கே மாநாட்டுத் தலைவர் “சாபம்”கூட (?) விட்டார். நான் அதை சாபமாகத்தான் கருதுகிறேன். 40 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும் - படாதபாடுபட வேண்டும் என்று நம்முடைய மாநாட்டினுடைய தலைவர் அவர்கள் விரும்புகிறார் என்றால், நான் என்ன சொல்வது?

இன்னும் 40 ஆண்டுகள். இயற்கை இடம் கொடுத்தால்கூட, என்னுடைய இதயம் இடம் கொடுக்காது. ஏனென்றால், ஐந்து முறை - இது ஐந்தாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த காலகட்டத்தில், ஏறத்தாழ எனது 70 ஆண்டுகால பொது வாழ்வில் ஒரு 50 அல்லது 60 ஆண்டு காலம் அரசியலிலே பிணைந்திருந்து, அரசியலிலே கலந்திருந்து, ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து, எதிர்க்கட்சியிலே வீற்றிருந்து மக்கள் பணி ஆற்றியிருக்கின்றேன்.
இந்த காலகட்டத்தில் நான் நல்லவர்களையும் சந்தித்திருக்கிறேன் - நல்லவர் அல்லாதவர்களையும் சந்தித்திருக்கிறேன். நான் நன்றி உள்ளவர்களையும் சந்தித்திருக்கிறேன். நன்றி என்றால் எந்த சந்தையில் விற்கும் என்று கேட்பவர்களையும் சந்தித்திருக்கின்றேன். அதனால், என்னை நீங்கள் வாழ்த்தினாலும் சரி - என்னை நீங்கள் பாராட்டினாலும் சரி - அதற்கு நான் தகுதி உடையவன் என்றால், ஏற்றுக் கொள்கின்றேன். அதே நேரத்தில், என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே என்றால், இயலாது - இயற்கை இடம் தராது - இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்.

ஏனென்றால், நன்றியுள்ள சமுதாயம் இது. அது வேடிக்கைக்காகவோ அல்லது கிண்டலுக்காகவோ - கேலிக்காகவோ சொல்லவில்லை. இந்தச் சமுதாயத்தில் நல்லது செய்பவர்களுக்கு மக்கள் பணியாற்றுகின்றவர்களுக்கு சமூக சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு, உயரிய இடத்திலிருந்து உபதேசிப்பவர்களுக்கு என்ன பரிசு கிடைக்கும் என்பதை நபிகள் நாயகத்தினுடைய வாழ்க்கையே உதாரணமாக அமைந்திருக்கிறது.நான் படித்திருக்கிறேன் - நபிகள் நாயகத்தினுடைய வரலாற்றில் ஒரு சம்பவம் நாள்தோறும் அவர் நடந்துசென்ற பாதையில் ஒரு அம்மையார் மாளிகையின் மாடியில் இருந்து அவர் தலையிலே குப்பையைக் கொட்டுவார் என்றும், நபிகள் நாயகம் கொட்டப்பட்ட அந்தக் குப்பையை ஒரு கை கொண்டு துடைத்தவாறு, வாய் பேசாது, அவர் வழியில் செல்வார் என்றும் - இப்படி ஒவ்வொரு நாளும் குப்பை கொட்டப்பட, கொட்டப்பட அதைக் கவனித்தவாறு செல்லுகின்ற நபிகள் நாயகம் ஒருநாள் அதே வீதி வழியாக வரும்பொழுது அண்ணாந்து பார்த்தார் - அந்த அம்மையார் குப்பை கொட்ட வரவில்லை. பக்கத்திலே இருந்த ஒரு பையனைக் கேட்டார், ‘‘ நாள்தோறும் நான் இங்கே வரும்போது ஒரு அம்மையார், என் தலையிலே குப்பை கொட்டுவார்களே, அவர்கள் எங்கே?’’ என்று கேட்டார். அந்தச் சிறுவன் சொன்னான் ‘‘அவர்களுக்கு உடல் நலமில்லை. அதனால் மாடியிலே படுத்திருக்கிறார்’’ என்று. “அப்படியா!” என்று கேட்ட நபிகள் நாயகம், மெல்லப் படியேறி, மாடிக்குச் சென்று அந்த அம்மையாரைப் பார்த்து, ‘‘என்னம்மா, உடம்பு சரியில்லையா? ’’ என்று விசாரித்தார். அந்த அம்மையாருக்கு வெட்கம் தாங்கவில்லை. தினம் தினம் குப்பை கொட்டுகிற நம்மைப் பார்த்து, அதற்காக வருத்தப்படாமல் - கோபப்படாமல், நம்முடைய உடல் நலம் விசாரிக்க மாடி ஏறி வந்து விட்டாரே என்று அந்த அம்மையார் எண்ணி வெட்கப்பட்டார் - என்று நபிகள் நாயகத்தைப் பற்றி ஒரு கதை உண்டு - நான் படித்திருக்கின்றேன்.

அதைப் போல, இஸ்லாமிய சமுதாயத்திலே உள்ள பெரியோர்கள், தலைவர்கள், தூதர்கள், அவர்களுக்காகப் பாடுபட்டவர்கள், அவர்கள் வழிநின்று பாடுபடுகின்ற நாங்கள், சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் ஒன்றைச் செய்ய விரும்பினால், அதற்கு பரிசு - நபிகள் நாயகத்தின் தலையிலே ஒரு அம்மையார் குப்பை கொட்டினாரே, அதைப் போல ஒரு சில அம்மையார்கள் எங்கள் தலையிலே குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படுகிற குப்பையையெல்லாம் நாங்கள் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை - ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால், குப்பை கொட்டுகின்றவர்களுக்கு கை அலுத்துப் போய் ‘‘இவன் தலையிலே எவ்வளவு குப்பை கொட்டினாலும், இவன் திருந்தமாட்டான்’’ என்று எப்படி அவர்கள் அயர்ந்து விடுகிறார்களோ, அதைப் போல, எங்களை எதிர்ப்பவர்கள், எதிரிகள், பகைப்பவர்கள், எங்களுக்குச் சாபம் விடுபவர்கள் யாராக இருந்தாலும், எங்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யாராக இருந்தாலும், சொல்லிச் சொல்லி, எழுதி எழுதி, வாய் அலுத்துப் போவார்களே தவிர, நாங்கள் நபிகள் நாயகம் அல்ல - அவர்களுடைய வழியைப் பின்பற்றுகின்றவர்கள். அப்படி அந்த வழியைப் பின்பற்றி எங்கள் தலையிலே குப்பை கொட்டியவர்களுக்கு அறிவு புகட்டுவோமே தவிர, நாங்கள் ஆத்திரப்பட்டு, எரிச்சல்பட்டு, அவர்கள் மீது கோபப்பட்டு, கொந்தளித்து, அதன் காரணமாக அமைதி இழந்து, நல்லெண்ணத்தை பரப்புவதற்கு பதிலாக, நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை நாங்கள் மிக நன்றாக உணர்ந்தவர்கள்.

எனவேதான், இங்கே சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள் - கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது. அதிலே ஒரு கோரிக்கைதான் - உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை. உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் 2010-2011 கல்வியாண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் 10 வகுப்புகளில் சிறுபான்மை மொழி பாடமாகச் சேர்க்கக் கோரி சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. இது தொடர்பாக, சிறுபான்மை மொழி பிரதிநிதிகளுடன் விவாதம் நடத்துவது குறித்து தேசிய சிறுபான்மைக் குழுமத்திடமிருந்து அறிவுரை பெறப்பட்டதன் அடிப்படையில் 27.10.2010 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்துத் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப் பட்ட பொதுகருத்துக்கள்; பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பிப்பதற்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்தல்; அனைத்து மொழிப்பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல்; சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடத்துதல்; மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண் இடம் பெறச் செய்தல் - இதன்மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த மாநாட்டிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள். அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், மத்தியிலும், கேரளா போன்ற மாநிலங்களிலும் இருப்பதைப் போல் வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்காக தனித்துறையை ஏற்படுத்தக் கோருகின்ற ஒரு தீர்மானம் - அல்லது கோரிக்கை. இதற்கு நான் தருகின்ற விளக்கம் - தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, ‘‘அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்’’ எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டிலே வாழும் தமிழர்களின் நலனுக்காக, திராவிட முன்னேற்றக் கழக அரசு - இன்றல்ல, அரசுக் கட்டிலிலே வீற்றிருப்பதற்கு முன்பே, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே, வெளிநாட்டிலே, குறிப்பாக - இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்காக, அவர்களுடைய உரிமைகளுக்காக முதல் குரல் கொடுத்ததே திராவிட முன்னேற்றக் கழகம்தான். இன்னும் சொல்லப் போனால், முதல் குரல் கொடுத்த ஈழத் தந்தை செல்வநாயகத்தின் பக்கம் நின்று, தொடர்ந்து குரல் கொடுத்தவன் இந்தக் கருணாநிதி என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். எனவே, வெளிநாட்டிலே இருக்கின்ற - இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் - அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் - ‘‘அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்’’ எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.

உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் - வெற்றி பெறுவோம். ‘‘தமிழக அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும்பணிபுரிந்து, படைப்பிலக்கியங்களை உருவாக்கியுள்ள முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீக அறிஞர்கள் ஆகியோரின் படைப்புகளையெல்லாம் தொகுப்பதற்கும் அவற்றில் சிறந்தோங்கி நிற்கும் அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கும் தமிழக முதல்வர் அவர்களிடம் இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது’’ - என்று ஒரு தீர்மானம். அதைப் பற்றிய விளக்கம் :-
தமிழக அரசு தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்களைக் கண்டறிந்து அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்கள் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகை வழங்கி வருகிறது. இவ்வகையில் கா.மு. ஷெரிப், புலவர் முகம்மது நயினா மரைக்காயர் ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய்; புலவர் குலாம் காதிறு நாவலரின் மரபுரிமையர்க்கு 6 இலட்சம் ரூபாய்; சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், திரு மணவை முஸ்தபா ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாய்; டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் மரபுரிமையர்க்கு 7 இலட்சம் ரூபாய் என மொத்தம் 43 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டு; 6 முஸ்லிம் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மேலும் கோரிக்கைகள் வரப்பெறுமாயின் அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தாம்பரம் மேம்பாலம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அனைத்து சிறுகடைகளையும் அப்புறப்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுகடை வியாபாரிகளுக்கு நல வாரியம் அமைத்து பேருதவி புரிந்த மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இதில் தலையிட்டு இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி சாலையோர, சிறுகடை வியாபாரிகள் வாழ்வில் ஒளியேற்ற இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று ஒரு தீர்மானம். இது பற்றி - தாம்பரம் மேம்பாலம் சாலை விரிவாக்கத்தின்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை, சாலை ஒரங்களில் உள்ள சிறு கடைகள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டால், இச்சிறு கடை வியாபாரிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து தனியே பரிசீலனை செய்யப்படும். என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாம்பரம் சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர சிறுகடை வியாபாரிகளின் துயர்துடைக்க அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுத் தெரிவித்தால், தேவைப்படும் நிலத்தின் அளவு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து, முடிவு செய்து, அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து, அவர்கள் எந்தவித சிரமமுமின்றி வியாபாரம் செய்ய, தாம்பரம் நகராட்சியின்மூலம் கடைகளைக் கட்டி பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளையேற்று சிறுபான்மை சமுதாயத்திற்கு, குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்திற்கு பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். நல்ல காலம் - மாநில அரசை வலியுறுத்தவில்லை. மதம் மற்றும் மொழி வழி சிறுபான்மையினரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரை இனம் கண்டறிவதற்கான அளவுகோல்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல் - இவைகளுக்காக மிஸ்ரா கமிஷன் பத்து சதவிகிதம் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திரு கிறது. அந்தப் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

இப்போது முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடாக தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டிருப்பது 3.5 சதவிகிதம். பத்து சதவிகிதத்தை மத்திய அரசு கொடுக்குமேயானால், அந்த பத்து சதவிகிதத்திற்குள் இந்த 3.5 சதவிகிதமும் இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆகவே பத்து சதவிகிதத்திற்காகவும் நாம் அணி வகுப்போம். அந்த அணி வகுப்பில் வெற்றி பெற்றால் பத்துக்குள் ஐந்து கிடைக்கும், அதையும் பெற்றுக் கொள்வோம். சட்டியிலே இருந்தால்தான் அகப்பையிலே வரும் என்ற பழமொழியை சாதாரணப் பெண்கள் கூடச் சொல்வார்கள். அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். பத்து கிடைத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம், பெருமை அடைவோம். பரவாயில்லை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டிலே நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்று நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். அந்த மகிழ்ச்சியை இந்த மாநாட்டிலே கலந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கும் எங்களுக்கும் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கின்றது.

எனவே திராவிட முன்னேற்றக் கழகமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தோழமைக் கட்சிகள். இங்கே ஒரு நண்பர் பேசியதைப் போல இடையிலே பாரதிய ஜனதா கட்சியோடு நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட, நானும் அந்த அணியிலே அன்றைக்கு இடம் பெற்றிருந்த மற்ற கட்சிக்காரர்களும், வாஜ்பாய் அவர்களிடத்திலே சொல்லி உயர்ந்தபட்ட கோரிக்கை, குறைந்தபட்ச கோரிக்கை என்றெல்லாம் இருக்கின்ற அந்தக் கோரிக்கைகளில் நாங்கள் உங்களிடம் வைக்கின்ற குறைந்தபட்ச கோரிக்கை என்னவென்றால், குறைந்த பட்ச திட்டம் என்னவென்றால், மத மாச்சர்யங்கள் இல்லாத, மத பேதமில்லாத மத உணர்வில்லாத, அரசாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதைத்தான் குறைந்தபட்ச கோரிக்கையாக வைத்தோம். அது, நிறைவேறி நடைமுறையில் இருந்த வரையில் நாங்கள் பாரதிய ஜனதா அரசோடு, ஒட்டிக் கொண்டிருந்தோம்.

அதிலேயிருந்து அவர்கள் தவறி மறுபடியும் பாபர் மசூதி ,இடிப்பு மறுபடியும் மதவாதம், மறுபடியும் ஜாதி பேதம் என்ற உணர்வுகளுக்கு அவர்கள் அடிமையானபோது, ‘‘இங்கே எங்களுக்கு இனி வேலையில்லை’’ என்று அன்றைக்கே வெளியே வந்துவிட்டோம். இதை நான் சொல்வதற்குக் காரணம், நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு ஒட்டிக் கொண்டு, அணி வகுத்த நேரத்தில், சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், எனக்கு முன்னால் பேசிய ஒரு நண்பர், தேசிய கட்சியில் தொடர்புடையவர் சொன்னார் - ‘‘நாங்கள் கலைஞரை நம்புகிறோம். அவருடைய கட்சியிலே நாங்கள் அபிமானம் வைத்திருக்கிறோம். இருந்தாலும், கலைஞர் பி.ஜே.பி.யோடு உறவு கொண்டிருக்கிறாரே, மதவாதம் நுழைந்துவிடுமே என்றார். அந்த மேடையிலே - இங்கே சொன்னார்கள் அப்துல் கலாம் இருந்தார் என்று - அப்துல் கலாம் அல்ல, சி.சுப்பிரமணியம் இருந்தார்.

அந்த விழாவிற்கு தலைமை வகித்தவர் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் - சி.எஸ். இருந்தார். அவர் பேசும் போது சொன்னார், ‘‘பாரதிய ஜனதா கட்சி மதவாதத் திற்கு இடமளிக்கலாம். ஆனால், கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் நுழையாது என்று நம்பலாம் ’’ என்று சி.சுப்பிரமணியம் சொன்னார். சி.சுப்பிரமணியம் சொன்ன வார்த்தையை நாங்கள் ஊர்ஜிதப்படுத்தினோம். நாங்கள் அதை நிரூபித்துக் காட்டினோம். மதவாதம் பா.ஜ.க.வில் தலை காட்டியவுடன் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அன்றைக்கு உணர்த்தினோம். இன்று வரையில் அந்த மதவாத சக்திகளுக்கு நாங்கள் இடம் தராமல், இன்று வரையில் எங்கள் உறுதியைக் காப்பாற்றி வருகிறோம்.

அப்படிக் காப்பாற்றுவதிலே நாங்கள் கொண்ட அந்தப் பிடிவாதத்தை, புரிந்து கொண்ட காரணத்தினால்தான் இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நீங்கள் காணுகிறீர்கள். இந்தக் காட்சியை இன்று ஒரு நாள் மாத்திரம் அல்ல - இந்த மாநாட்டிற்காக மாத்திரம் காணப்படுகின்ற காட்சி அல்ல. என்றென்றும், நிலையாக இருக்கக்கூடிய காட்சியைத்தான் நீங்கள் காணுகிறீர்கள். என்றென்றும் நிலையாக இந்த அணி இருக்கும். இந்த அணியிலே எந்தக் கட்சி வந்து சேர்ந்தாலும், பிரிந்து சென்றாலும், இந்த அணி அப்படியே ஒட்டுமொத்தமாக நிலைத்து இருக்கின்ற அணி. இங்கே அவர்கள் சொன்னதுபோல, என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே நான் 10வது படிக்கும்போதே திருவாரூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கான் பகதூர் கலிபுல்லா சாகிப் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் பிறைக் கொடியை கையிலே பிடித்துக் கொண்டு, தொண்டர் படையில் ஒருவனாக இருந்தவன் நான். ஏறத்தாழ, 60 ஆண்டுகளுக்கு முன்பே, பிறைக் கொடியை கையிலே பிடித்தவன் நான். அந்தப் பிறை - இங்கே நண்பர்கள் சொன்னதைப் போல வானத்திலே உள்ள சூரியனை விட்டு அகலாது அந்தப் பிறையை விட்டு சூரியனும் அகலாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மேடையில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். இது தொடரும் - தொடர்ந்து கொண்டேயிருக்கும். எந்த இடர் வரினும் அந்த இடரை இடறி எறிந்து விட்டு தொடரும் - தொடரும் தொடரும் என்பதை எடுத்து சொல்லி, வாழ்க உங்களது ஒற்றுமை - வளர்க உங்களுடைய உள்ள உறுதி என்று கூறி விடைபெறுகிறேன்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.