Skip to main content

ம.தி.மு.க. மாநாடும் தீவு ஆராய்ச்சியும்!

து 'மாநாடு சீஸன்'... கடலூரில் தி.மு.க-வின் மகளிர் அணி மாநில மாநாடு முடிந்த நிலையில், சென்னை மண்டல மாநாட்டை நிறைய நெருக்கடிகளைத் தாண்டி, ஜூன் 18-ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் நடத்தி முடித்திருக்கிறது ம.தி.மு.க.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யிலிருந்து தீவுத் திடல் நோக்கிப் புறப்பட்ட தொண்டரணிப் படையை தனிமேடையில் நின்று சல்யூட் வைத்து ரசித்தார் வைகோ. ம.தி.மு.க. கொடிகளுடன் நடந்த தொண்டர் கள், 'லெஃப்ட் ரைட்'டுக்குப் பதிலாக 'இடம் வலம்' என்று தமிழில் சொல்லிக்கொண்டு மிடுக்கு நடை போட்டதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்.
அணிவகுப்பு, தீவுத் திடல் வந்து சேர்ந்ததும் மாநாடு களை கட்ட ஆரம்பித்தது. தலைமைச் செயலகம் மாடலில் சீரியல் விளக்குகள் மின்னிய பந்தலில், காக்கிச் சட்டைகளுக்கு வேலை வைக்காமல் கட்டுக்கோப்பாக இருந்தனர் தொண்டர்கள். கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் வழக்கம் போலவே வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார்.
''பதினான்கு வருஷ வனவாசத்துக்குப் பிறகு ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது இதிகாச வரலாறு. ம.தி.மு.க. 14 ஆண்டுகள் கடந்து 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சிவப்பு விளக்கு சுழல, காக்கிகள் புடை சூழ வைகோவுக்கு பட்டாபிஷேகம் சூட்டுவோம்'' என நாஞ்சில் சம்பத் கண்களை மூடிக்கொண்டு சபதமேற்க, மேடையில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் தம்பிதுரை நெளிந்தார். சளைக்காமல் தொடர்ந்த சம்பத்,
''நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து வைகோதான் போனார். நார்வேக்கு வைகோவை கூப்பிட்டார்கள். உன்னை ஃபோர்வே (நான்குவழி பாதை) திறக்கத்தான் கூப்பிடுவார்கள்'' என்று கருணாநிதியை நக்கலடிக்க, கலகலப்பு.
பொடா அழகுசுந்தரம் பேச்சில் கவர்ச்சித் தூக்கல். ''வைகோவுக்கு கவர்ச்சி போய்விட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி ஒரு பேட்டியில் 'உங்களுக்கு யாருடைய கண் பிடிக்கும்' என்ற கேள்விக்கு 'வைகோவின் கண்கள் எனக்குப் பிடிக்கும்' என்று சொல்லியிருக்கிறார். பிரியாமணிக்கே வைகோவின் கண்கள் மீதுதான் ஆசை என்றால், எங்கள் தலைவருக்கா கவர்ச்சி போய்விட்டது?'' என்று அழகுசுந்தரம் கேட்க, வைகோ முகத்தில் வெட்கம்.
ம.தி.மு.க. மாநாட்டில் புலிகளுக்கு ஆதரவான குரல்கள் இல்லாமலா?
அரசியல் ஆய்வு மையக் குழு உறுப்பினர் சிவகங்கை கணேசன் பேசும்போது ''தீவையும் வைகோவையும் பிரிக்க முடியாது என்பதால்தான் தீவுத் திடலில் மாநாடு நடக்கிறது. தீவுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அது தீவுத் திடலாக இருந்தாலும் சரி... யாழ்ப்பாணத் தீவாக இருந்தாலும் சரி..!'' என்றார்.
இன்னும் ஒருபடி மேலே போன ம.தி.மு.க-வின் பொருளாளரும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான மு.கண்ணப்பன், ''விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தோம். இன்றும் ஆதரிக்கிறோம். நாளையும் ஆதரிப்போம். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் என்றைக்கும் மாறமாட்டோம். இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது இருக்கும் தடையை அரசு நீக்க வேண்டும்'' என்று மீண்டும் ஒரு முறை பிரகடனம் செய்தார்.
புலி கோஷத்தைத் தொடர்ந்த ம.தி.மு.க.-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ''வங்கக் கடலில் இருந்து வவுனியா வரை கப்பலோட்டிய இரண்டாம் தமிழன் எங்கள் வைகோ. ஜூன் 3-ம் தேதி இதே தீவுத் திடலில் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக கப்பல் வடிவ மேடை எல்லாம் போட்டு, கூட்டம் போட்டார்கள். அந்தக் கப்பல் மேடையே தரை தட்டியிருந்தது. ஒரு நாள் அதுபோலவே தி.மு.க-வும் தரைமட்டமாகும்'' என்று பொங்கினார்.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு இடையே அனுபவ அமைதியோடு பேசினார், மூத்த அரசியல்வாதியான இரா.செழியன். ''அரசியலை வளர்த்தவர்கள் இருக்கிறார்கள். அரசி யலை வைத்து வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் வைகோ முதல் ரகம். தீவுத்திடலைச் சுற்றி கூவம் ஓடுகிறது. இதே போல்தான் தமிழ்நாடும் இந்திய நாடும் இப்போது இருக்கிறது. நீங்கள்தான் தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும் சுத்தப்படுத்த வேண்டும். எனக்கு வயது 85. என் வாழ்நாளில் உங்கள் வாழ்வை நிச்சயம் காண்பேன்'' என வைகோவைப் பார்த்து கூற, கூட்டம் ஆர்ப்பரித்தது.
இப்படிப் பலரும் மேடையில் பின்னியெடுத்த நிலையில், சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த தம்பிதுரையோ 'தடுமாறுதுரை' ஆகிவிட்டார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பெயரை 'மறுமலர்ச்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்று புதுப் பெயர் சூட்டி சொதப்பியவர், 'வைகோதான் அடுத்த முதல்வர்' என்று ம.தி.மு.க-வினர் எழுப்பிய கோஷத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்... ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் நாம் பிடிப்போம். வைகோ நாடாளுமன்றம் செல்வார். அடுத்து தமிழகத்தில் புரட்சித் தலைவி ஆட்சி அமையும்'' என்றார்.
இரவு ஒன்பதரை மணிக்கு மேல் தன் கறுப்புத் துண்டை உயர்த்திவிட்டபடி பேச ஆரம்பித்தார் வைகோ. ''வெள்ளை மாளிகைக்குள் கறுப்பர்கள் நுழைய நெடுநாள் போராட்டம் நடந்து வந்த நிலையில், ஒபாமா அமெரிக்காவில் வேட்பாளராகி இருக்கிறார். அவரால் ஜெயிக்க முடியும் போது, நாமும் ஒரு நாள் ஜெயிப்போம். அப்போது நேர்மையான அரசியலை நிலை நாட்டுவோம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்'' என்று பொங்கியவர், கடலூர் தி.மு.க. மகளிரணி மாநாட்டுக்காக மின்சாரம் திருடப்பட்ட படங்களை எடுத்துக் காட்டினார். தொடர்ந்து,
''விவசாய பம்பு செட்டுகள், ஏழைகளின் வீடுகள், தொழிற்சாலைகள் எல்லாம் மின்சாரம் இல்லாமல் திண்டாடும்போது கடலூர் மாநாட்டுக்கு அரசு மின்சாரமா? வழிப்பறி திருடர்கள் போல மின்சாரத்தைக் கொக்கிப் போட்டுத் திருடி இருக்கும், ஏ ஒன் குற்றவாளி அண்ணன் கலைஞர்... ஏ டூ குற்றவாளி அண்ணன் ஆற்காடு வீராசாமி'' என்று உச்ச தொனியில் பேச... தீவுத் திடலே கைதட்டலால் திணறியது.
- எம்.பரக்கத் அலி
படங்கள் வி.செந்தில்குமார்

கட்டுரையின் ஒர்ஜினலை பார்க்க
https://www.vikatan.com/juniorvikatan/2008-jun-25/politics/47409.html

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி,