ஏற்கெனவே இரண்டுமுறை தள்ளிப்போன தி.மு.க. மகளிர் அணி மாநாடு ஒருவழியாக கோலாகலமாக கடலூரில் நடந்து முடிந்துவிட்டது. 'கனிமொழியை அரசியலில் முன்னிலைப்படுத்துவதற்காக நடத்தப் படுகிறது' என்று பேசப்பட்ட இந்த மாநாடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்துகொள்ளாததை அடுத்து பல யூகங்களை கட்சித் தொண்டர்கள் மனதில் விதைத்துவிட்டு முடிந்திருக்கிறது. இந்நிலையில், மகளிர் அணி மாநாடு ஜூ.வி-யின் பார்வையில்...
கண்ணீர்விட்ட வசந்தி கணேசன்...
மாநாட்டு முகப்பில் இருக்கும் கொடியை கருணாநிதி தொட்டுக் கொடுத்த பிறகு வசந்தி கணேசன் அதை ஏற்றுவதாகத் திட்டம். கருணாநிதி வருவதற்கு முன்பே கொடியை ஏற்றி இறக்கி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது... அது வானில் பறந்து கொண்டிருந்த நிலையில்... மாநாட்டுக்கு வந்துவிட்டார் கருணாநிதி! 'தலைவர் எடுத்து கயிற்றைத் தராமலே தன்னிச்சையாக கொடியேற்றியிருக்கிறீர்கள். இதற்காக நான் வருத்தப் படவில்லை. பெண்கள் எப்போதுமே தன்னிச்சையாக செயல்படவேண்டும். அந்தத் துணிவு வந்திருக்கிறது என்பதற்காகப் பெருமைபடுகிறேன்' என்று தன் பேச்சில் கருணாநிதி தனக்கே உரிய பாணியில் இதுபற்றி சொல்ல... பெண் நிர்வாகிகள் அசட்டு சிரிப்புடன் நெளிய ஆரம்பித்தனர். வசந்தி கணேசனோ கண்ணீரே விட்டார்.
'ஸீட்'டுக்காக நடந்த வீட்டுப் போட்டி!
விசேஷ மேடையில் கருணாநிதி அமர்ந்திருக்க... அதற்குப் பக்கத்திலேயே வி.ஐ.பி-க்களுக்கு இன்னொரு மேடை. ஊர்வலத்தை கருணாநிதி பார்வையிடும் விசேஷ மேடைக்கு வந்த முதல் ஆள் ராசாத்தி அம்மாள். அடுத்த சில நிமிடங்களில் தயாளு அம்மாள், கயல்விழி, அவர் கணவர் வெங்கடேஷ் ஆகியோர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து கருணாநிதி மேடைக்கு வந்தார்.
மேடையின் முன்வரிசையில் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் அமர்ந்துகொள்ள, பின்வரிசையில் மற்றவர்களுக்கு ஸீட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் தயாளு அம்மாளை அமரவைத்த கயல்விழி, தானும் அமர்ந்து கணவரையும் ஒரு ஸீட்டில் அமரச் சொன்னார். அதற்குள் வெங்கடேஷ் உட்கார போடப்பட்ட ஸீட்டில் அமர்ந்துவிட்டார் ராசாத்தி அம்மாள். அதோடு தன் நாற்காலியை மெதுவாக நகர்த்தி முன்வரிசையில் துரைமுருகனுக்குப் பக்கத்தில் போட்டுக்கொண்டார். இதையெல்லாம் வெறித்துப் பார்த்த கயல்விழி, தயாளு அம்மாளை முன் வரிசைக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்தி அமரவைத்தும் விட்டார். பிறகு, தனக்குப் பக்கத்தில் கணவர் வெங்கடேஷ§க்கு ஒரு இருக்கையை வரவழைத்து அவரையும் முன்வரிசைக்கு நகர்த்திவிட்டார். கயல்விழி-ராசாத்தி அம்மாள் இடையே நடந்த இந்த நாற்காலி யுத்தம் அடுத்த நாள் மேடையில் கயல்விழி பேசும்போது வெளிப்பட்டது. தன் உரைக்கு முன் அனைவரையும் விளித்த கயல்விழி, ராசாத்தி அம்மாள் பெயரை மட்டும் மறந்தும் குறிப்பிடவில்லை.
களத்தில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
ஊர்வலத்தைப் பார்வையிடும் தலைவரைப் பார்ப்பதற்காக திரண்ட கூட்டம், ஒருகட்டத்தில் நகராத தால் ஊர்வலம் முன்னேற முடியவில்லை. காக்கிகள் போராடிப் பார்த்து ஓய்ந்த நிலையில், களமிறங்கினார் கடலூர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேட்டியை மடித்துக் கட்டி கோதாவில் குதித்தவர் கையில் கம்பை எடுத்துச் சுழற்ற... கூட்டம் நெல்லிக்காய் மூட்டையாய் சிதறியது.
கனிமொழிக்கு முக்கியத்துவம்!
ராதிகா செல்வி, கவிஞர் சல்மா, விஜயா தாயன்பன், தமிழச்சி ஆகியோர் பின்தொடர வந்த கனிமொழியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திலிருந்து மேடை யிலிருந்த ராசாத்தி அம்மாள் வரை பல வி.ஐ.பி-க்களும், 'தலைவர் அமர்ந்து இருக்கும் மேடைக்கு வாருங்கள்' என வற்புறுத்தினார்கள். கடைசிவரை முடியாதென மறுத்துவிட்ட கனிமொழி, வி.ஐ.பி-க்கள் அமர்ந்து இருந்த மேடையிலேயே அமர்ந்துகொண்டார். கடைசி ஓரத்தில் அமர்ந்திருந்த கனிமொழியை கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு கையைப் பிடித்து அழைத்து வந்து, மேடையின் பிரதானமாக அமர வைத்தார். ஊர்வலத்தில் வந்தவர்கள் உற்சாகமாய் மேடையை நோக்கி கை அசைத்தபோது தமிழரசு, கனிமொழியின் கையைப்பற்றி தூக்கி அசைக்கச் சொன்னார். அதன்பிறகு ஊர்வலம் முடியும் வரை கனிமொழியின் உயர்ந்த கைகள் இறங்கவே இல்லை.
மு.க.ஸ்டாலின் அடிச்சுவட்டில்...!
மேடையில் பல வி.ஐ.பி-க்கள், ஊர்வலத்தில் திரளான மகளிர் அணியினர், சுற்றிலும் கட்சித் தொண்டர்களின் பெரும் கூட்டம்... இப்படி எங்கு நோக்கினும் தலைகள் தென்பட்ட போதிலும், அதையெல்லாம் மீறி ஒரு பெரிய வெற்றிடம் எல்லோர் கண்களையும் உறுத்தியது. அது மாநாட்டுக்கு வராத மு.க.ஸ்டாலினால் உருவான வெற்றிடம்! மு.க.ஸ்டாலின் ஆதரவு அமைச்சர்களான பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரை மாநாட்டில் பெரிய லென்ஸ் வைத்துத்தான் தேட வேண்டியிருந்தது. அவர்களும் மாநாட்டுக்காக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதேபோல மு.க.ஸ்டாலின் ஆதரவு மாவட்டப் பிரமுகர்கள் தங்கள் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதிலும் சுணக்கம் காட்டியிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.
தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்று வைபவத்தில் வெறும் சொற்ப அளவிலான தொண்டர்களே அரங்கில் கூடியிருந்தனர். 'மு.க.ஸ்டாலின் மாநாட்டுக்கு வராததால் தான் இப்படியாகி விட்டது' என்று அப்போதே வெளிப்படையாகப் பேசினார்கள் தொண்டர்கள். பிறகு அவசரகதியில் ஏற்பாடுகள் நடக்க, அடுத்த சில மணிநேரத்தில் திமுதிமுவென திரண்டு விட்டனர் கழக மகளிரணியினர்.
சென்னை மாவட்டத்தில் மகளிர் அணியினர் தயாராக இருந்தும் அவர்களுக்கு பஸ்கள் ஏற்பாடு செய்யவில்லையாம் மாவட்டச் செயலாளர்கள். மகளிர் அணி நிர்வாகி ஒருவர் அவர்களோடு பேச... 'எங்களால் எதுவும் செய்ய முடியாது' என்று பதில் வந்ததாம். அதன்பிறகு விஷயம் மு.க.அழகிரி காதுக்குப் போனதாம். அப்புறமென்ன முடியாது என்றவர்கள் பெட்டிப் பாம்பாகி பஸ்களை ஏற்பாடு செய்தார்களாம்.
'இது கனிமொழியின் வெற்றி மாநாடு. ஒருசில நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காதது உண்மைதான். சாதாரண விளம்பர போர்டுகளைக்கூட அவர்கள் வைக்கவில்லை. மு.க.ஸ்டாலின் வராதது குறித்து ஆரம் பத்தில் சலசலப்புகள் கிளம்பியபோதே, அதற்கெல்லாம் கனிமொழி நாசுக்காக பதில் சொல்லி விட்டார். ஆனால், அப்படியும் அவரை மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சித்திரிக்கிற வேலைகளை சில பத்திரிகைகள் செய் கின்றன. சில அமைச்சர்கள்தான் இதற்குக் காரணம். எது எப்படியோ... மாநாடு சிறப்பாக நடந்து முடிந்து விட்டது' என்று தன்னிலை விளக்கத்தை நம்மிடம் கொடுத்தார் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர்.
மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் சிலரோ, 'கனிமொழி மு.க.அழகிரியோடு கைகோத்திருப்பது, அவருக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுப்பது, எஸ்.சி.வி-க்கு எதிராக மாநாட்டுக்கு முன்பு மு.க.அழகிரி மதுரையில் நடத்திய பிரஸ்மீட்... இதுமாதிரி பல காரணங் களால் தளபதி மாநாட்டுக்கு வராமல் இருந்துட்டார்னு கிளப்பிவிடுறாங்க. உண்மையில் மருத்துவ செக் அப் முடியாததால் தளபதி மு.க.ஸ்டாலின் லண்டன்லருந்து வரமுடியலை' என்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் வரவில்லை என்றாலும் மகள் கயல்விழியின் பேச்சை ரசிக்க, தவறாமல் மாநாட்டுக்கு ஆஜராகி இருந்தார் மு.க.அழகிரி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடந்தபோது மு.க.அழகிரி தலையே காட்டவில்லை. கெஸ்ட் ஹவுஸில் கருணாநிதியை பார்த்த கையோடு கிளம்பிவிட்டார்.
மு.க.ஸ்டாலினுக்கு பதில் கனிமொழி!
முதல்நாள் ஊர்வலம் முடிந்த பிறகு கனிமொழி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊர்வலம் முடிய வெகுநேரமாகி விட்டதால் இரவு பத்துமணிக்குத்தான் முதல் நாள் கூட்டம் தொடங்கியது. அப்போது கனிமொழி பேசினால் பத்திரிகைகளில் மறுநாள் பெரிய செய்தியாக வராது என்பதால் அடுத்த நாள் மு.க.ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் அவரை பேச வைத்தார்கள்.
'மகளிர் மாநாட்டை எதற்காக கடலூரில் நடத்து கிறோம் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக சட்ட மன்றத்துக்குச் சென்ற முதல் பெண் உறுப்பினர் கடலூரில் இருந்துதான் சென்றார். அதுதான் காரணமே தவிர, வேறு கற்பனைகளுக்கு இங்கு இடமில்லை' என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்ட கனிமொழி, கருணாநிதியை டாக்டர் கலைஞர் என்று குறிப்பிட்டு வானளாவ புகழ்ந்தார். ஒரு கட்டத்தில் வெறுமனே டாக்டர்... டாக்டர்... என்று சொல்லிக்கொண்டே வந்தவர், 'டாக்டர்' என்று சொல் வதால் வேறு யாரையாவது புரிந்துகொள்ள வேண்டாம்' என்று சிலேடையில் விளையாடினார்.
நூர்ஜஹான் லகான்!
மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு கட்சியின் மகளிரில் சீனியரான நூர்ஜஹான் பேகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேரணியை இவர்தான் தொடங்கிவைத்தார். கருத்தரங்கத்தில் நீட்டி முழங்கியவர்களின் அருகில் சென்று புடவையைப் பிடித்து இழுத்து, 'சீக்கிரம் முடிங்க. இல்லாட்டி மைக்கை ஆஃப் பண்ணிடுவேன்...' என்று எச்சரிக்கைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அமைச்சர் தமிழரசி பேசும்போதும், 'போதும் போதும்' என தன் லகானை நூர்ஜஹான் வீச... வெறுத்துப் போன தமிழரசி பாதியிலேயே பேச்சை முடித்துக் கிளம்பினார். அவருக்குப் போர்த்தப்பட்ட சால்வை மற்றும் நினைவுப்பரிசை அவரிடம் நூர்ஜஹான் கொடுக்க முயல, கோபத்தில் அதையும் வாங்கவில்லை. அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை நூர்ஜஹான். ஆனால், பலரையும் பாதியில் பேச்சை நிறுத்த வைத்த நூர்ஜஹானின் லகான், கயல்விழி பேசும்போது காணாமல் போனதுதான் வியப்பான விஷயம்.
மு.க.அழகிரி வீட்டு வாரிசு!
மாநாட்டில் தாத்தா கருணாநிதி முதல் அனைவரையும் பிரமிக்க வைத்தவர் அழகிரியின் மகள் கயல்விழிதான். அரசியலையோ, வீண் சலசலப்புகளையோ திணிக்காமல், 'வள்ளுவரும் வாய்மையும்' என்ற தலைப்பில் மேடைப் பேச்சுக்குரிய உச்சரிப்புகளோடும், முக பாவனைகளோடும் கயல்விழி பேச... தாத்தாவின் முகத்தில் அப்படியரு ஆனந்தம். மகளின் பேச்சை பூரிப்போடு கேட்டாலும் கன்னிப் பேச்சில் கயல்விழி பாஸ் ஆக வேண்டுமே என்ற படபடப்புதான் மு.க.அழகிரி முகத்தில் அதிகம் தெரிந்தது.
-எம்.பரக்கத் அலி, டி.கலைச்செல்வன் படங்கள் உசேன், பா.கந்தகுமார் கட்டுரையின் ஒர்ஜினலை பார்க்க.. https://www.vikatan.com/juniorvikatan/2008-jun-22/politics/47431.html |
Comments