Skip to main content

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

 2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது!

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?
ஜெயலலிதாவுக்கு தண்டனையா?
ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார்.

இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலை கொடுத்திருக்கிறார். தலைமைத் தேர்தல் கமிஷனும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தி.மு.க எம்.பி-யான குப்புசாமி சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதாவை எதிர்த்து அப்போதே வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜூன் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தர்மாராவ், எஸ்.பழனிவேலு ஆகியோர், ‘‘இந்தப் பிரச்னையில் சட்டத்தை மீறி ஜெயலலிதா செயல்பட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. இந்த விஷயத்தில் அப்போதே தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தேர்தல் அதிகாரிகளிடம் தவறான, பொய்யான உறுதிமொழிகளைக் கொடுத்த ஜெயலலிதா மீது தேர்தல் கமிஷன் ஆறு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

இதையடுத்து கடந்த 26-ம் தேதி டெல்லி தலைமை தேர்தல் கமிஷன், ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யச் சொல்லி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறதாம். அதோடு, புதுக்கோட்டை, புவனகிரி தேர்தல் அதிகாரிகளாக இருந்த ஆர்.டி.ஓ-வான கந்தசாமி மற்றும் சந்தானம் ஆகிய இருவரிடமும், ‘ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று விளக்கம் கேட்டிருக்கிறதாம் தேர்தல் கமிஷன்.

மேலும் அந்தக் கடிதத்தில், ‘நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்த குற்றத்துக்காக ஜெயலலிதா மீது புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளின் மாஜிஸ் திரேட்டிடம் வழக்குப் பதிவு செய்ய வேண் டும். இந்த நடவடிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மேற் கொள்ள வேண்டும். கந்தசாமியும் சந்தானமும் அளிக்கும் விளக்கத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நரேஷ் குப்தா தெரி விக்கவேண்டும்’ என்றும் குறிப்பிட்டி ருக்கிறது.

இந்நிலையில், ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்த எம்.பி-யான குப்புசாமியிடம் பேசினோம். ‘‘நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ததை எதிர்த்து 2001-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி டெல்லி தலைமைத் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை

எதுவும் எடுக்கவில்லை. ஆகவே, நாங்கள் நீதிமன்றத்துக்குப் போனோம். இப்போது இரண்டு தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அந்த உறுதிமொழியை, ஜெயலலிதா தான் போட்டியிட எண்ணி வேட்பு மனுத் தாக்கல் செய்த நான்கு இடங்களிலும் கொடுத்திருக்கிறார். நான்கு இடங்களிலும் வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, ‘ஏற்கெனவே கொடுத்த உறுதிமொழியை ஜெயலலிதா மீறிவிட்டார். அதனால், வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்...’ என்று சொல்லி எங்கள் தரப்பு ஆட்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொன் னார்கள். ஆனால், ஜெயலலிதாவின் வேட்பு மனு டான்சி வழக்குத் தீர்ப்பை மையமாக வைத்து தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், இந்த பிரச்னை அப்போதைக்குப் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும், நான் கோர்ட்டுக்குப் போனபிறகு இப்போது இரண்டு அதிகாரிகளுக்கு மட்டுமே தலைமைத் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆண்டி பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா நான்கு இடங்களில் போட்டியிட்ட விஷயம் தெரியும் என்பதால் அவர்களுக்கும் சேர்த்துத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்றார் குப்புசாமி.

இந்த விஷயத்தில் எந்த மாதிரி நட வடிக்கை இருக்கும் என்பது பற்றி வக்கீல் சங்கரிடம் பேசினோம். ‘‘மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்பிரிவு 33(7)-ன்படி இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒருவர் போட்டி யிட முடியாது. பொது ஊழியரிடம் பொய்யான தகவல்களை அளித்திருந்தால், அது இந்த சட்டப்படி குற்றமாகும். அதே சமயம், பொது ஊழியரிடம் பொய்யான தகவல் அளித்திருப்பது குறித்து இந்திய தண்டனைச் சட்டம் 177-வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியும். அதில் குற் றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக் கப்படலாம். இப்போது எழுந்திருக்கும் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவில்லை. தேர்தல் கமிஷன் வலியுறுத்த லின்படி புவனகிரி, புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகள், சம் பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்வார்கள்’’ என்றார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தரப்பை அறிவதற்காக அ.தி.மு.க-வின் ராஜ்யசபா உறுப்பினரான வழக்கறிஞர் ந.ஜோதியிடம் கேட்டபோது, ‘‘இது சாதாரண விஷயம். இதுபற்றியெல்லாம் நான் என்ன கமென்ட் சொல்வது?’’ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

தள்ளிப்போகுமா நடவடிக்கை ?

‘ஜெயலலிதா மீது ஆறு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என்று சொல்லி, கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருப்பதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தில் தலைமைத் தேர்தல் கமிஷன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

‘‘ ‘ஜெயலலிதா மீது 2001-ம் ஆண்டு நடந்த குற்றத்துக்காக கோர்ட் நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவு 2002-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த சட்டப்படி தான் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது இந்திய தண்டனைச் சட்டம் 177-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா?’ என தெரிவிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் கோரியிருந்தது கமிஷன்.

இந்த மனுவும், வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகளிடம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, ‘‘ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக் கிறோம். அதனால், இந்த மனுவை விசாரிக்கக்கூடாது...’’ என்று சொன்னார். அடுத்து குப்புசாமி சார்பில் ஆஜரான சண்முக சுந்தரம், ‘‘ஜெயலலிதாவுக்கு உதவும் வகை யில் தேர்தல் கமிஷன் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது வழக்கை கால தாமதப்படுத்தும் முயற்சி...’’ என்று வாதாடினார். இறுதியில் நீதிபதிகள், ‘‘வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், தேர்தல் கமிஷனின் மனுவை ஏற்க முடியாது’’ என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.

- எம்.பரக்கத் அலி
படம்: வி.செந்தில்குமார்

கட்டுரை லிங்க்: 
https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-govt-open-the-kodanadu-fileseps-team-on-trouble-elangovan-explaining-it?pfrom=latest-infinite

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.