Skip to main content

மிஸ்டர் கழுகு - அம்மாவின் காமெடி டைம்?

2007 ஜூலை 25 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது!

வியாழன் பொழுது சாயும் நேரம்... கழுகார் உள்ளே வந்தபோது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதா பெயரில் வெளியாகியிருந்த அறிக்கையும் கையுமாக நாம் அசையாமல் அமர்ந்திருந்தோம்.

மிஸ்டர் கழுகு - அம்மாவின் காமெடி டைம்?

''என்ன... 'ஜனாதிபதி தேர்தலில், என் கட்சியின் எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் தாங்களாகவே முடிவெடுத்து ஓட்டு போட்டுவிட் டார்கள். அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என்று அம்மை யார் விட்டிருக்கும் அறிக்கையைக் கண்டுதானே ஆடிப் போயிருக் கிறீர்? அம்மாவை நடுநாயகமாக்கி, டெல்லி, ஹைதராபாத், சென்னை என்று மாறி மாறி கூட்டங்கள் நடத்தி, கடைசியில் 'ஜனாதி பதித் தேர்தலை புறக்கணிப்போம்' என்று உறுதிபட அறிவித்த மூன்றாவது அணியைச் சேர்ந்த சில கட்சிகளின் சில உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. மட்டும் சிந்தாமல் சிதறாமல் பெருங்கூட்டமாக ஓட்டு போட்டிருப்பதைப் பார்த்து அரசியல் வட்டாரமே குழம்பித் தான் போயிருக்கிறது’’ என்று சிரித்தார் கழுகார்.

''சிரிக்கிற விஷயமா இது?'' என்று நாம் கடுகடுக்க...

''அட! 'ஜனாதிபதித் தேர்தலை வச்சு அம்மா காமெடி கீமெடி பண்ணலியே' என்று அ.தி.மு.க-வினரே தமாஷாகச் சொல்லுகிறார் கள், தெரியுமா? 17-ம் தேதியன்று தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பால்தான், தன் கட்சி உறுப்பினர்கள் தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மொத்தமாகப் போய் ஓட்டு போட் டார்கள் என்று சொல்லியிருக்கிறார் அம்மையார். ‘தனக்கு ரொம்பவும் விசுவாசமான மலைச்சாமி கூட நாடாளுமன்றத்துக்குப் போய் ஓட்டுப் போட்டது இப்படித்தானோ...’ என்பதே அ.தி.மு.க-வினரின் நகைப்புக்குக் காரணம்.

'இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தங்கள் உறுப்பினர் களுக்கு கட்சிகள் கட்டளை ஏதும் போடக்கூடாது' என்று தேர்தல் கமிஷனின் அறிக்கை சொன்னதுதான் அத்தனை குழப்பத்துக்குமே காரணம் என்கிறார்கள். இது சம்பந்தமாக தன் கட்சிக்காரர்களுக்கு எந்தவிதமான அறிக்கையும் விடமுடியாத பெருங்குழப்பத்தை தேர்தல் கமிஷனின் இந்த அறிக்கை ஏற்படுத்திவிட்டதாம். அந்த அறிக்கையை வைத்துக்கொண்டு அரசியல் சாசன வல்லுநர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் அன்று இரவு தொடங்கி, மறுநாள் மதியம் வரை அம்மையார் ஆலோசனை நடத்திக் கொண்டேஏஏஏ இருந்தாராம்!

தனியரு எம்.எல்.ஏ. என்ற முறையில் தான் தேர்தலைப் புறக்கணித்துவிடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்த அம்மா, சரியாக தேர்தல் நாளாகப் பார்த்து சென்னைக்கு வெளியே போய்விட் டாராம். மதியம் திரும்பி வரும்போது பார்த்தால், அவர் கட்சி உறுப்பினர்களெல்லாம் போய் கனகாரிய மாக ஓட்டு போட்டுவிட்டுத் திரும்பியிருந்தார்களாம்...! அம்மையாரின் இந்த விளக்கங்கள் என்னவோ சீரிய ஸாகத்தான் இருக்கிறது. ஆனால், கட்சிக்காரர்கள் ஏன்தான் இதை படா தமாஷாகப் பார்க்கிறார்கள் என்றுதான் எனக்கும் புரியவில்லை'' என்று சொன்ன போதும் கழுகாரின் சிரிப்பு நிற்கவில்லை.

மொறுமொறு காரக் கடலை பொட்டலத்தை அவர்முன் வைத்தோம். எடுத்துப் பிரித்தவர்,

மிஸ்டர் கழுகு - அம்மாவின் காமெடி டைம்?

''தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததால்தான், அ.தி.மு.கழகத்தின் எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் அவரவர் தொகுதிக் குப் போய்விட்டார்கள். தேர்தலுக்கு முந்தைய தினம் மாலை 'உடனே கிளம்பி சென்னைக்கு வாருங்கள்’ என்று ஒரு உத்தரவு போனதாக எல்லா நாளிதழ் களிலுமே செய்தி வந்திருக்கிறது. அந்த நியூஸை நாளிதழ்களுக்கு ஒரே மாதிரி கொடுத்தது யார் என்பதும் மர்மமாக இருக்கிறது! ஊருக்குப் போன உறுப்பினர்கள் சென்னைக்கும் டெல்லிக்குமாக சிட்டாய்ப் பறந்து... கோட்டையிலும் நாடாளுமன்றத் திலும் க்யூவில் நின்று ஓட்டுப் போட்டார்கள்!'' என்றார்.

நாம் அமைதியாக இருக்க... கடலையை மென்றபடி, கழுகார் தொடர்ந்தார் -

''கோட்டையில் வாக்குப்பதிவு சமயத்தில் நான் இருந்தேன். அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளில் இருந்து கொஞ்சநாளாகவே ஒதுங்கியிருந்த எஸ்.வி.சேகர் தனது ஃபேவரிட் காவி கலரில் சட்டை அணிந்து வந்திருந்தார். 'உங்களுக்கு பிரச்னையே இல்லை... கரெக்ட்டா பி.ஜே.பி. வேட் பாளருக்கு போட்டுடுவீங்க' என்று ஒரு நிருபர் டபாய்க்க... சிரித்தபடியே பதில் சொல்லாமல் உள்ளே போனார் சேகர். விஜயகாந்த் தனது புது படத்துக்கான ஷூட்டிங் கிலிருந்து நேராக கறுப்பு ஜீன்ஸ் - அதே கலர் ஷர்ட்டில், கூலிங்கிளாஸும் அணிந்துவர... 'என்ன சார் கறுப்பு? நீங்க மட்டும் புறக்கணிக்கப் போறீங்களா?' என்றார் இன்னொரு நிருபர். சிரிப்பு மட்டுமே பதில்! வெகுநேரம் காத் திருந்தார். 'க்யூ நீளமா இருக்கு? உங்க சான்ஸ் வர்றதுக்கு இரண்டு மணி நேரமாவது ஆகும்' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். போகிற போக்கில் சொன்னாராம். 'ஆ... ஷூட்டிங் கெட்டுப் போகும். நான் மதியம் வர்றேன்' என்று மேக்-அப் கலையாமல் திரும்பிப் போன விஜயகாந்த், பிறகு வந்து ஓட்டளித்தார்!''

''சரிதான்!''

''தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் சிலரை அணுகிய ஒரு நிருபர், 'இந்த தேர்தல்லதான் வாக்குச் சாவடி கைப்பற்றுதல், வன்முறை கலாட்டா எது வும் இருக்காதுல்ல?' என்று முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்க, வேகமாக நகர்ந் தார்கள் அந்த எம்.எல்.ஏ-க்கள்! வாக்குப்பதிவுக்கு முந்தின தினம் அறிவாலயத்திலும் ஒரு ஜாலி காட்சி அரங்கேறியதாகச் சொல்கிறார்கள்!''

''அது என்ன?''

''வாக்குச் சீட்டு எப்படி இருக்கும், அதில் எப்படி பேனாவால் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை எம்.எல்.ஏ-க்களுக்கு விளக்கினார்களாம். கோ.சி.மணிதான் டெமான்ஸ்ட்ரேஷனாம்! ரோஸ் கலரில் மாடல் வாக்குச் சீட்டை உயர்த்திக் காட்டியவர், 'நீங்க எல்லாரும் ஒண்ணு போடணும்' என்று சொல்ல... முதல்வர் அவசரமாக, 'அட, இரண்டாவதா இருக்கிற பிரதீபா பாட்டீல் பேருக்கு முன்னாடி ஒண்ணு என்கிற எண்ணை எழுதணும்னு தெளி வாச் சொல்லுங்க. இல்லாட்டி, ஒண்ணாம் நெம்பர்ல இருக்கிற பி.ஜே.பி. வேட்பாளர் ஷெகாவத்துக்கு போட்டுடப் போறாங்க' என்றா ராம். ஹால் முழுக்க சிரிப்பலையாம். 'முந்தி ராஜ்யசபா தேர்தல் நடந்தப்ப நாவலர் ஓட்டு போட்ட மாதிரி ஆயிடக் கூடாது' என்றும் பழசை நினைவூட்டினாராம் முதல்வர்!''

''பழசு எமக்கு மறந்து போச்சே?''

''அது ஒன்றுமில்லை... காலியான ஒரு ராஜ்யசபா ஸீட்டுக்கு பழனியாண்டியும் இரா.செழியனும் போட்டியிட்டபோது, தேர்தல் அதிகாரி கொடுக்கிற பேனாவால் எண்ணைக் குறிக்காமல் தன்னிட மிருந்த பச்சை இங்க் பேனாவில் குறித்து செல்லாத ஓட்டாக்கிவிட்டார் நாவலர் நெடுஞ்செழியன்... இதில் தி.மு.க. ஆதரவோடு போட்டியிட்ட செழியன் தோற்றுப் போய்விட்டாராம்'' என்று நினைவுப் பெட்டகத்தை திறந்து காட்டி அசத்தினார் கழுகார்.

தொடர்ந்து,

''அ.தி.மு.க-வின் ராஜ்யசபா உறுப் பினர்கள் பன்னிரண்டு. அவர்கள் டாண் என்று காலை பத்து மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ஆஜர். அங்கிருக்கும் அ.தி.மு.க. அலு வலக அறையின் ஃபேக்ஸ் மிஷினையே பார்த்துக் கொண்டிருந்தார் மைத்ரேயன். எங்கிருந்தோ வந்தது ஓலை! ஒரே வரியில் இருந்தது அதன் செய்தி. அதைத்தொடர்ந்து, இயந்திரகதியில் எம்.பி-க்கள் போய் ஓட்டுப் போட் டார்கள். புதுவை காங்கிரஸ் தலைவரான நாராயணசாமிக்கு எகத்தாளம் தாங்கவில்லை. 'வாங்கய்யா, வாங்க! மூன்றாவது அணினு ஏதோ பரபரப்பு பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ஓட்டுப் போட்டு அதை நல்லபடியா க்ளோஸ் பண்ணிட் டீங்க. ரொம்ப தேங்க்ஸ்' என்று சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள குலுக்குவதற்காக கையை நீட்டினார் நாராயணசாமி. அ.தி.மு.கழக எம்.பி-க்கள் ஒதுங்கி பதுங்கி நடந்தார்கள்!''

''பி.ஜே.பி. ரியாக்ஷன்?''

மிஸ்டர் கழுகு - அம்மாவின் காமெடி டைம்?

''சொல்லணுமா? அவர்களுக்கு குஷியோ குஷி! அவர் களும் கை குலுக்க ஓடி வர... அங்கும் அ.தி.மு.க. தரப்பு நாலுகால் பாய்ச்சலில் நழுவியது.

தமிழக சட்டமன்றத்தில், பிரதீபா பாட்டீலுக்கான தேர்தல் ஏஜென்ட்டாக இயங்கிய தி.மு.க. கொறடா சக்கர பாணி உற்சாகமாக இருக்க, ஷெகாவத்தின் ஏஜென்ட்டான பி.ஜே.பி-யின் சி.பி.ராதா கிருஷ்ணன் டல்லடித்துப் போய் அமர்ந்திருந்தார். வரிசையாக அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் வர ஆரம்பித்தபோது... மனுஷரின் முகத்தில் தாண்டவ மாடிய சந்தோஷம் சொல்லி மாளாது!''

''தலைவி சொல்லாமலே சுயமாக சிந்தித்து அவர வர் விருப்பப்படி அ.தி.மு.க-வினர் ஓட்டுப் போட்டார்கள் என்பது உண்மையானால்... எல்லாருமே ஷெகாவத்துக்குத் தான் போட்டிருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?''

''இந்தக் கிண்டல் கேலிதானே வேணாங்கிறது?'' என்று முறைத்தார் கழுகார்.

''சரி, அடுத்து துணை ஜனாதிபதி தேர்தலாச்சே... அதற்கு மூன்றாவது அணி நிறுத்தியிருக்கும் வேட்பாளர் ரஷீத் மசூதுக்கு அ.தி.மு.க. ஓட்டுப் போடுமா... அல்லது...? அவரவர் விருப்பப்படி ஓட்டுக்கள் போட்டு முடித்ததும், அம்மாவிடமிருந்து புதுசாக ஏதாவது அறிக்கை வருமா?'' என்று இழுத்தோம்.

''இந்த விவகாரத்தில் நான் கேள்விப்பட்ட பின்னணியை மட்டும் சொல்கிறேன்... மூன்றாவது அணியின் முடிவையும் தாண்டி ஜனாதிபதித் தேர்தலில் அ.தி.மு.க-வினர் சர்ப்ரை ஸாக கலந்துகொள்ளக் காரணம் - 'தேர்தல் புறக்கணிப்பு மக்கள் விரோதம்' என்ற கடுமையான விமரிசனத்திலிருந்து தப்புவதற்குத்தான் என்று யூகிக்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, 'மூன்றாவது அணி விளையாட்டை அம்மா முடித் துக் கொண்டு விட்டார்... துணை ஜனாதிபதித் தேர்தலும் முடிந்தபிறகு, மெள்ள மெள்ள பின்வாங்கி அப்படியே பி.ஜே.பி. பக்கம் போய் ஐக்கியமாகிவிடுவார்' என்கிறார் கள்!''

''என்னது இது புது குண்டு?''

''அது அப்படித்தானாம்! காங்கிரஸ் கூட்டணி அரசு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், அடுத்தத் தேர்தலில் அவர்களுக்கு மிச்சமிருப்பது மக்களின் அதிருப்திதான் என்று கணக்குப் போட்டுத்தான் மூன்றாவது அணியே ஆரம்பிக்கப்பட்டது. எப்படியும், இடதுசாரிகள் காங்கிரஸ் அணியிலிருந்து பிரிந்து தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்பது ஜெயலலிதாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் உள்பட பல விஷயங்களில் காங்கிரஸ் பக்கம் இடதுசாரிகள் காட்டுகிற ஆதரவும் கரிசனமும் அவரை ரொம்பவே யோசிக்க வைக்கிறதாம். அதுதவிரவும், மூன்றாவது அணியின் மற்ற தலைவர்கள் மீது ஜெ-வுக்கு வேறு சில வருத்தங்களும் கிளைவிடத் துவங்கியிருக்கிறதாம்?''

''அதென்ன வருத்தங்கள்?''

''முக்கியமாக, 'அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக மூன்றாவது அணியில் யாரை நிறுத்துவார்கள்' என்று இப்போதே தெரிந்து கொள்ள விரும்பினாராம் ஜெயலலிதா. அதற்கு பதில் கிடைத்த பாடில்லை. இன்னொருபக்கம், நடுநாயகமாக தன்னை வைத்தாலும், முக்கிய முடிவுகளெல்லாம் முலாயம்சிங் எண்ணப்படிதான் எடுக்கப்படுகின்றன என்ற நெருடல் ஜெ-வுக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டதாம். 'துணை ஜனாதிபதி இடத்துக்கு ரஷீத் மசூதை வேட்பாளராக்குவது' என்பதே ஜெ-வுக்கு விருப்பமில்லாமல்தான் நடந்தது என்கிறார்கள். தன் சாய்ஸாக ஜெ. முன்வைத்தது முன்னாள் தமிழக கவர்னர் ஃபாத்திமா பீவியை என்கிறார்கள். 'மிக நெருக்கடியான சூழலில், தயங்காமல் தனக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஃபாத்திமாவுக்கு ஏதேனும் பதில் உதவி செய்வதாக ஜெயலலிதா வாக்குக் கொடுத்திருந்தாராம். அதை நிறைவேற்ற முடியாமல் போனதும்கூட, 'பி.ஜே.பி. பக்கம் போனால்தான் என்ன?' என்ற எண்ணத்துக்கு வலு சேர்த்துவிட்டதாம்! அதற்கெல்லாம் அச்சாரமாகத்தான் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 'தலைவிக்கே தெரியாமல்' ஓட்டுப் போட்டு பி.ஜே.பி-யை குஷிப்படுத்தினார்களாம்!''

''சரி, அதென்ன பி.ஜே.பி. சாய்ஸ்?''

''நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி ஒருபக்கமும், பி.ஜே.பி. ஒருபக்கமுமாக இருந்தால்... தமிழ்நாட்டில் மூன்றாவது அணி எந்தளவுக்கு கவர்ச்சியாகத் தெரியும் என்பதில் அம்மையாருக்கே பலத்த சந்தேகம் வந்திருக்கிறதாம். மேலும், மளமளவென ஆதரவை கூட்டிக்கொண்டுப் போகும் விஜயகாந்த்தை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பி.ஜே.பி. தீவிரம் காட்டுவதையும் பார்க்கிறார். காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களோடு, விஜயகாந்த் கவர்ச்சி ஓட்டுக்களும் சேர்ந்தால்... அந்த அணிக்கு அதிக இடங்கள் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறார். விஜயகாந்த்துக்கு அப்படி ஒரு கூட்டணி சான்ஸ் கொடுத்துவிட்டால், பிறகு அவர் வளர்ச்சியை தடுக்க முடியாமலே போகும் என்றும் நினைக்கிறாராம். அ.தி.மு.க. இருக்கிற இடத்துக்கு எப்படியும் விஜயகாந்த் வரமாட்டார் என்பதால்... பி.ஜே.பி-யோடு கூட்டு போடுவது பலவகையிலும் லாபம் என்று போகிறதாம் ஜெ-வின் யோசனைகள்!''

''கூட்டணி போடாமல் இருப்பதுதானே தன் பலம் என்கிறார் விஜயகாந்த்?''

''அது சட்டமன்ற அரசியலுக்குத்தானாம். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தனித்து நின்று தான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று போகிறதாம் அவருடைய கூட்டல் - கழித்தல்!''

‘‘அதெல்லாம் சரி... அம்மாவின் முக்கிய கூட்டணி தளபதியான வைகோவின் கட்சிக்காரர்களும்தானே ஓட்டுப் போட்டார்கள். ஆனால், தேர்தல் கமிஷன் அறிக்கையால் வைகோ குழம்பிய மாதிரியோ, தேர்தல் நாளில் வெளியூர் போன மாதிரியோ அறிக்கை எதுவும் விடவில்லையே?’’

‘‘ஒருவேளை தன் கட்சிக்காரர்களின் காமெடி பார்வையில் சிக்க வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கலாம்’’ என்று கழுகார் சொல்லிக் கொண்டிருந்தபோதே... நமக்கு போன் வர, எடுத்துப் பேசினோம். முறைத்துக் கொண்டே இருந்தார் கழுகார்.

''இடையில் நீர் மட்டும் போன் வந்தால் பேசுகிறீர். நாங்கள் பேசினால் முறைக்கிறீரே?'' என்றோம்.

''ஐயோ சாமி... அது எச்சரிக்கை முறைப்பு! குறிப்பிட்ட ஓரிரு தொழிலதிபர்கள், இரண்டு மூன்று அரசியல்வாதிகள், நாலைந்து பத்திரிகையாளர்களின் போன் பேச்சுக்களை உளவு போலீஸார் கவனிக்க ஆரம்பித்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்தே அடித்துச் சொல்கிறார்கள். 'பார்த்துப் பேசும்' என்றுதான் சொல்ல வந்தேன்!'' என்ற கழுகார்,

''பத்திரிகையாளர்கள் பேசுவதையெல்லாம் உளவு போலீஸார் கேட்டுக்கொண்டு போய் அப்படியே ஆட்சி மேலிடத்தில் ரிப்போர்ட்டாகக் கொடுத்து, விஷயங்களை முன்கூட்டி தாங்களே கண்டுபிடித்ததுபோலச் சொல்லி பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம். இதனால், உளவு போலீஸார் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் முதல்வரிடம் முறையிடப் போகிறார்களாம்’’ என்றார்.

‘‘நோகாமல் பணியாற்றுகிறார்கள் போல!’’

‘‘இப்படிப் பத்திரிகையாளர்கள் போனையெல் லாம் ஒட்டுக் கேட்பதை விட்டுவிட்டு, தங்களிடம் இருக்கும் போலீஸாரை ஒழுங்காக விரட்டி வேலை வாங்கினாலே நாலாபுறமிருந்தும் அவர்களுக்கு செய்திகள் கிடைக்கும். ஊருக்குள் ரிமோட் குண்டு வெடிப்பதையெல்லாம் முன்கூட்டியே மோப்பம் பிடித்து தடுக்கவும் முடியும். பொதுமக்களும் ஈரக்குலை நடுங்காமல் நிம்மதியாக இருப்பார்கள்'' என்றவர்,

ஜெ. அறிக்கையை கையில் எடுத்துக்கொண்டே, ''இப்படியரு அறிக்கை வெளியானதே தனக்குத் தெரியாது. யாரோ தன் பெயரில் அனுப்பிவிட்டார்கள் என்று அம்மையார் பெயரில் அடுத்த அறிக்கை வராத வரையில் சரி!'' என்று கலகலத்தபடி பறந்தார்.

‘மர்ம’ மயக்கத்தில் ஜெயலட்சுமி...

சமீபத்தில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ-வான ரேணுகாச்சார்யா மீது கிளுகிளு புகார்

கொடுத்துக் கர்நாடகா அரசியலையே கலக்கிய பெங்களூரு நர்ஸ் ஜெயலட்சுமி, திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அவர் இப்போது பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 19-ம் தேதி அதிகாலை ‘நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்’னு ஜெயலட்சுமியின் நண்பர் ஒருவருக்கு, ஜெயலட்சுமியிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. அவர் உடனே ஜெயலட்சுமியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே, நுரைதள்ளிய நிலையில் ஜெயலட்சுமி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அவரிடம் பேசியபோது, ‘‘ரேணுகாச்சார்யா விவகாரம் ஆரம்பிச்சதுலருந்தே ஜெயலட்சுமிக்கு அடிக்கடி மிரட்டல் போன் வந்துகிட்டே இருந்துச்சு. முதல்ல அவங்க பயப்படலை. ஆனா தொடர்ந்து மிரட்டல் அதிகமா வரவும் பயந்துபோய் இப்படி செஞ்சுட்டாங்களோ என்னவோ... இல்லேன்னா, யாராவது வீடு புகுந்து அவரை மிரட்டி, தற்கொலைக்குத் தூண்டி விட்டாங்களான்னும் தெரியலை’’ என்றார்.

வழக்கை விசாரிக்கும் யஷ்வந்த்புரா காவல் நிலையத்தில் பேசியபோது, ‘‘ஜெயலட்சுமி இதுக்கு முன்பும் ஒருதடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்காங்கன்னு விசாரணையில் தெரிய வந்திருக்கு. அதையும் மனதில் வைத்துத் தற்போதைய தற்கொலை முயற்சி பற்றி விசாரிச்சிட்டு இருக்கோம். மற்றபடி எங்களுக்கு அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை...’’ என்றனர்.

நினைவு வந்து ஜெயலட்சுமி வாய் திறந்தால்தான் குழப்பம் தெளியும்.

படங்கள்: சு.குமரேசன், இரா.ரவிவர்மன்
கட்டுரை லிங்க்: 
https://www.vikatan.com/oddities/76705
 
 

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

விழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவல