2015 ஏப்ரல் 18 தேதியிட்ட ஜுனியர் விகடனில் எழுதிய கட்டுரை இது !
இது ஓர் அபூர்வமான புகைப்படம்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகிய இருவர் மீதும் இவ்வளவு மீடியா வெளிச்சம் பாய்ந்தது இப்போது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, போயஸ் கார்டனில் கேமரா விழுங்கிய இந்தக் காட்சிக்குத் தனிக் கதை உண்டு.
2007ம் ஆண்டு அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார் ஜெயலலிதா. முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, சௌதாலா உட்பட இந்தியாவின் முக்கியத் தலைகளை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். மூன்றாவது அணிக்கு 'ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி’ என்றெல்லாம் அப்போது பெயர் வைத்தார் ஜெயலலிதா. அரசியல் சூழலில் அந்த அணி காணாமல் போனது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் கார்டன் வந்த சௌதாலாவை ஜெயலலிதா வாசலில் காத்திருந்து வரவேற்றார். அப்போது எடுத்த படம்தான் இது. வெவ்வேறு கட்சிகளை... மாநிலங்களைச் சேர்ந்த ஜெயலலிதாவுக்கும் சௌதாலாவுக்கும் இப்போது ஓர் அரசியல் ஒற்றுமை உண்டு.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளான இவர்கள் மீது இப்போதும் மீடியாவின் பார்வை படர்ந்திருக்கிறது.
இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான சௌதாலா அரியானா மாநிலத்தில் நான்குமுறை முதல்வராக இருந்தவர். 19992005ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்தபோது நடந்த ஆசிரியர் தேர்வு ஊழல் இந்தியாவையே நாறடித்தது. 3,206 இளநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறின. போலி ஆவணங்கள் கொடுத்தும் திருத்தியும் ஏராளமானோர் பணி நியமனம் வாங்கினர். சி.பி.ஐ விசாரித்த இந்த வழக்கில் சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யா தர், ஷேர் சிங் பத்சமி உட்பட 55 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் பாய்ந்தது. டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. 2013 ஜனவரி 16ம் தேதி சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம். அத்துடன் மேலும் பலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2013 பிப்ரவரி 7ம் தேதி டெல்லி ஹைகோர்ட்டில் சௌதாலா மேல்முறையீடு செய்தார். சௌதாலாவுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை டெல்லி ஹைகோர்ட் கடந்த மார்ச் 5ம் தேதி உறுதி செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி ஹைகோர்ட், சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலா, சஞ்சீவ்குமார், வித்யா தர், ஷேர் சிங் பத்சமி ஆகியோருக்கு விசாரணை கோர்ட் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது.
'80 வயது முதியவரான சௌதாலாவின் வயதைக் கருத்தில்கொண்டு கருணை காட்ட வேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியாது. முதல்வர் பதவியில் இருந்த சௌதாலா, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முன்னுதாரணமாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அவர்களை ஏமாற்றிவிட்டார். வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் மனதில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்திவிட்டார்’ என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் நீதிபதி சித்தார்த் மிரிதுல்.
சௌதாலா வழக்கில், கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது 2013 ஜனவரி 16ம் தேதி. இதன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது 2015 மார்ச் 5ம் தேதி. அதாவது சௌதாலாவின் மேல்முறையீட்டு மனு மீது 2 ஆண்டுகள் கழித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
18 ஆண்டுகளாக நீடித்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 'நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி அபராதம்’ என 2014 செப்டம்பர் 27ம் தேதிதான் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு எழுதினார் குன்ஹா. இதன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரியில் தொடங்கி 41 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முடிந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் மூன்றே மாதங்களில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. சௌதாலாவுக்கு மேல்முறையீட்டு மனு முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகின. ஜெயலலிதாவுக்கு சீக்கிரமே வழக்கு முடிந்திருக்கிறது.
''80 வயதான ஓம்பிரகாஷ் சௌதாலா 123 நாட்கள் சிறைத் தண்டனை அனுபிவித்த பிறகே ஜாமீன் பெற முடிந்தது. கால்நடைத் தீவன வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலுவுக்கு 75 நாட்களுக்குப் பிறகே ஜாமீனில் விடுதலையாக முடிந்தது. இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்கு அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது 'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா?’ என்ற வினா சாமானியர் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை'' என்று சொல்லி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!
விவாதத்துக்குரிய விஷயம்தான் இது!
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படம்: சு.குமரேசன்
படம்: சு.குமரேசன்
கட்டுரை லிங்க்: https://www.vikatan.com/government-and-politics/politics/105606-
Comments