Skip to main content

முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!


2008 ஜூன் 25 தேதியிட்ட ஜூனிய விகடன் இதழில் எழுதிய கட்டுரை!முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!
நாளரு குத்தலும், மணிக்கொரு முணுமுணுப்புமாக 'கூட்டணி தாம்பத்யம்' நடத்திக்கொண்டிருந்த பா.ம.க-வை ஒருவழியாக தி.மு.க. 'விவாகரத்து' செய்துவிட்டது. இந்த முறிவு, அரசியல் அரங்கில் கொஞ்சங்காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்ததுதான் என்பதால், அதிர்ச்சி அலைகள் பெரிதாக இல்லை. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது சுவாரஸ்யத்தை ரொம்பவே கூட்டுகிற கேள்வி.
இந்த நிலையில், மக்களின் மனநிலை குறித்து அறிய, மின்னல் வேக சர்வே மேற்கொண்டோம்.
ஜூ.வி. சர்வே டீம் நேரில் சந்தித்தது 961 பேரை. விகடன் டாட்காம் இணையதளம் மூலம் கருத்துப் பதிவு செய்தவர்கள் 1,698. ஆக மொத்தம் 2,659 பேர் கலந்து கொண்டார்கள்.

முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!
நேரிலும், இணையதளத்திலுமாக 'பா.ம.க-வை தி.மு.க கூட்டணியை விட்டு அனுப்பியதே சரி' என்பது பெருவாரியான மனநிலை. அதிலும், 'விகடன் டாட்காம்' இணையதள வாசகர்களுக்கு, பா.ம.க. மீது அப்படியொரு கோபம். பத்துக் கேள்விகளுக்கும் 'டிக்' அடித்ததோடு, படு காரமாக விமர்சனங்களும் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ''டாக்டர் ராமதாஸ் அய்யா... அவசரப்பட்டு அதிகமா குடைஞ்சுட்டீங்க. இங்க பேசற மாதிரியெல்லாம் அம்மா கூட்டணிக்குப் போனா பேசமுடியுமா? இல்ல, நீங்க நினைக்கிற மாதிரி அம்மாதான் கூட்டணிக்குள்ளே உங்களை சேத்துக்குவாங்களா?'' என்ற ரீதியில் இருந்தது.

அதேபோல், ''காடுவெட்டி குருவின் வார்த்தைகளுக்காகப் பொங்கி எழுந்தததாக சொல்கிறது தி.மு.க.! ஆனால், அந்தக் கட்சியின் மேடைப் பேச்சாளர்களின் தரம் உலக ஃபேமஸ் ஆச்சே? தெருக்கோடியில் வெற்றி கொண்டானும், நன்னிலம் நடராஜனும் மைக் பிடித்தால், அந்த வசவு வார்த்தைகள் தவறியும் காதில் விழக்கூடாது என்று வீட்டு ஜன்னல்களை எல்லாம் இழுத்து சாத்திக் கொள்கிறவர்கள் இன்றைக்கும் உண்டே? பெண் என்றும் பாராமல் ஜெயலலிதா பற்றி இவர்கள் கக்குகிற வார்த்தைகளை தி.மு.க. தலைமை எப்போதாவது கண்டித்தது உண்டா?'' என்ற குமுறல்களையும் கருத்துக்கணிப்புக்காக மக்களை நேரடியாக சந்திக்கப் போனபோது நம் சர்வே டீமிடம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
''தட்டிக்கேட்க பா.ம.க. மட்டும் இல்லை என்றால் இந்நேரம் தி.மு.க-வினர், மேலும் பத்து மடங்கு 'புகுந்து விளையாடி' இருப்பார்கள்'' என்ற அப்ஸர்வேஷனும் கூட இதில் அடக்கம்.
நமது சர்வே குழுவினர் நேரில் போனபோது...
பா.ம.க. வலுவாக உள்ள கடலூர், சிதம்பரம் ஏரியாக்களில் நாம் வலம் வந்தபோது, பெரும்பான்மையோர் தி.மு.க-வின் முடிவுக்கு ஆதரவாகவே இருந்தனர். நம்மிடம் சர்வே ஷீட்டை வாங்கிப் பார்த்த பெண்கள், ''நேத்துக்கூட நியூஸ்ல சொன்னாங்க. 'ஆற்காடு தலைய வெட்டினா என்ன? என் தலைய வெட்டினா என்ன? ரெண்டும் ஒண்ணுதானே?'னு கலைஞரு கேட்டிருக்காரு. காடுவெட்டி குரு போல ஆளுங்க இப்படி மந்திரிங்க தலையையே வெட்டுறேன்னு சொல்லும்போது, எங்களை மாதிரி சாதாரண ஜனங்களோட தலைக்கு என்னங்க உத்தரவாதம்? இப்படியெல்லாம் பேசக்கூடாதுப்பா!'' என வாயில் அடித்துக்கொண்டார்.
முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!
திருச்சி பகுதியில் லால்குடி அருகே சாலையோரம் மரத்தடியில் இளநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் சர்வே பேப்பரை நீட்டினோம். வாங்கி முழுக்கப் படித்துப் பார்த்தவர், ''ஏங்க காடுவெட்டி குரு மட்டுமா இப்படி பேசறாரு? கொஞ்ச நாள் முன்னாடி தி.மு.க. பேச்சாளர் வெற்றிகொண்டான் மீட்டிங் போட்டிருந்தாங்க. என் மகளைக் கூட்டிக்கிட்டு அந்த இடத்தை தற்செயலாக் கடந்துபோனேன். காது கூசுச்சு... அவ்வளவு ஆபாசமா பேசுனாரு. குரு பேசினது தப்புன்னா, இதுவும் தப்புத்தானே?'' என்றார்.
திருச்சி மாநகரில் நம்மை சூழ்ந்துகொண்ட ஆட்டோ டிரைவர்கள், ''ஜூ.வி-யா? வாங்க வாங்க..! என்ன... இதுவரை அய்யாவோட கைகுலுக்கி பேசிக்கிட்டிருந்த ராமதாஸ், இப்ப அம்மாகிட்ட கைக்கட்டி நிக்கப் போறாரா? கேட்டுச் சொல்லுங்க'' என்றபடியே சர்வே கேள்விகளுக்கு 'டிக்' அடிக்க ஆரம்பித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்டார கிராமத்தினர் ஒரு முடிவுக்கே வந்துவிட்டார்கள். ''விஜயகாந்த்தைக் கூட்டணிக் குள்ள கொண்டாறதுக்குதான் இப்ப திடீர்னு ராமதாஸை கலைஞர் கழட்டிவிட்டுட்டாரு... விஜயகாந்த்து எப்ப வருவாருங்க... உங்ககிட்ட ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்களேன்...'' என ஆர்வமாக நம்மிடம் கேட்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு பகுதியைச் சேர்ந்த பூவாயி என்பவரும், இதே மன நிலையைத்தான் பிரதி பலித்தார். ''அது சரிங்க... ஒரு கேள்விய விட்டுட்டீங்களே..? ராமதாஸ் போயிட்டாரே, அடுத்தது விஜயகாந்த்துதானே வருவாரு? இதைப்பத்தி கேக்கவே காணோம்?'' என நமக்கு கேள்வி போட்டார் பூவாயி.
திருப்பத்தூர் பகுதி மக்கள், ''ராமதாஸ் நல்ல எதிர்க்கட்சியாத் தான் இருந்தார். ஆனா, தேவையில்லாம எதிரிக்கட்சி யாவும் ஆயிட்டார். அதான் கூட்டணியை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க...'' என் கிறார்கள்.
மதுரை பாண்டிகோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் சர்வே டீம் போனபோது, ''என்ன தம்பி, கூட்டணி கீட்டணினு கேக்க வந்துட் டீங்க... எல்லாம் தில்லுமுல்லு பண்றாங்க. கூட்டணியே இல்லாம விஜயகாந்த் சொல்ற மாதிரி எல்லாரையும் தனியா நிக்கச் சொல்லுங்க, பாப்போம். அப்பதான் இதுபோல பிரச்னையெல்லாம் வராது...'' -ரெண்டு முழம் பூவை நாலு முழமாக அளந்து கொடுத்தபடியே நம்மிடம் கருத்து உதிர்த்தார்.
விருதுநகர் பக்கம் சர்வே ஷீட்டும் பேனாவுமாக நம்மைக் கண்ட பலரும், ''பா.ம.க-வை தி.மு.க. கழட்டிவிட்டது சரிதான்'' என்று சொல்லிவிட்டு கூடவே, ''தி.மு.க. ஆட்சியை இன்னும் பலப்படுத்திக்கணும்னா ஒரு காரியம் செய்யணும். அமைச்சரவையில காங்கிரஸ§க்கும் இடம் கொடுக்கணும். அப்படிச் செஞ்சா, காங்கிரஸ§க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்'' என்றனர்.
மதுரையைத் தாண்டி திருநெல்வேலி பக்கம் சென்றால்... அங்குள்ள பல கிராமமக்களுக்கு காடுவெட்டி குரு என்றால் யார் என்றே தெரியவில்லை. அவரைப் பற்றிய முன்குறிப்பு கொடுத்துவிட்டுத்தான் நாம் சர்வே ஷீட்டை நீட்டமுடிந்தது. அதோடு, மக்களிடம் இன்னொரு சந்தேகக் கேள்வி சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. ''ஏம்லே... கலைஞர் ஆட்சி கவுந்துடாதுல்ல?'' என்பதுதான் அந்தக் கேள்வி. இதையே நிறைய பேர் நம்மிடம் கேட்டனர்.
இதேபோல்தான் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும். அந்த மாவட்ட மக்களுக்கும், காடுவெட்டி குரு யார் என்றே தெரியவில்லை.
தலைநகரம் சென்னையில் சர்வே டீம் பல பிரிவுகளாகக் களமிறங்கி மக்களை சந்தித்தபோது, பல கருத்துகளை வெளிப்படுத்தினர்.
''இன்னாப்பா சர்வே எடுக்க வந்துட்டே... ஏழைங்க இருக்க வூடு கிடைக்க மாட்டுது... தம்மாத்தூண்டு அய்யர் ஹோட்டல்ல நாஸ்தா பண்ணப் போனாலே தோசை பதினேழு ரூபான்றான்... இதப்பத்தி சர்வே எடுய்யா... கூட்டணி இருந்தா இன்னா? முறிஞ்சா இன்னா?'' என நம்மை வறுத்தெடுத்தார் ராயப்பேட்டை அமீர் மஹால் அருகே நாம் சந்தித்த ஒரு முதியவர்.
முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!
அதே ஏரியா ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களோ, ''சார், நாடு இருக்கற இருப்புல அந்த குரு மட்டும் சிட்டியில இருந்தார்னா எப்பவோ என்கவுன்ட்டர் ஆயிருப் பார். அது தெரியாம ஏதேதோ வாய்க்கு வந்தமாதிரி பேசறது தப்புதானே? பாத்து இருக்கணும் அவர்...'' என்றனர்.
திருவல்லிக்கேணியில் பிஸியாக சலவை செய்துகொண்டிருந்த அயர்ன் கடைக்காரர், நம்மிடமே சர்வே கேள்விகளை வாசிக்க சொன்னார். அனைத்துக் கேள்விகளுக்கும் விடைகளை சொன்னவர், ''சரி... சன்மானம் என்னா தருவே?'' என கேட்க... ''அய்யா... இது இலவச கலர் டி.வி திட்டமெல்லாம் இல்லீங்க...'' என அவருடைய அறியாமையை காமெடியாக்கி விட்டு கழன்று வந்தோம்.

- ஜூ.வி. சர்வே டீம்

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.