Skip to main content

கொரோனா தடுப்பு... முன்பு சொன்ன 2,000 ரூபாயையும் சேர்த்துக் கொடுங்க எடப்பாடியாரே!

விகடன் இணையத் தளத்தில் 2020 மார்ச் 27-ம் தேதி எழுதப்பட்ட கட்டுரை!
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு தரப்படும் ஆயிரம் ரூபாயுடன், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தருவதாக சொன்ன இரண்டாயிரம் ரூபாயை எடப்பாடி அரசு சேர்த்து தருமா?

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதோடு, ``அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்'' எனவும் சொல்லியிருக்கிறார்.
பணத்தைப் பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவார்களே? இதை எப்படி வழங்கப் போகிறார்கள்? ரேஷன் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளில் நிவாரணம் விநியோகிக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
ரேஷன் கடை
ரேஷன் கடை

இதுதவிர கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சிறப்புத் தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணையும் வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன் கூடுதலாக 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனவும் அரசு சொல்லியிருக்கிறது. இந்த நிவாரணங்களுக்காக 3,280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குத் தரப்படும் இந்த நிவாரணம் தேவைதான். அவசியம்தான். கடந்த பொங்கலுக்காகப் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாயை எடப்பாடி ஆட்சி வழங்கியது. பொங்கலுக்கு 45 நாள்களுக்கு முன்பே வழங்க ஆரம்பித்தார்கள். அதற்குக் காரணம் அப்போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்தான். உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்காக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் தொகுப்பை வழங்கிய அரசு, இப்போது வீட்டிலேயே மூன்று வாரங்களுக்கு முடங்கிக் கிடக்கும் மக்களுக்குத் தரப்படும் தொகை வெறும் ஆயிரம் ரூபாய்தான். அன்றைக்குத் தேர்தலுக்காகத் தந்தார்கள். இப்போது எந்தத் தேர்தலும் இல்லை என்பதால் ஆயிரத்தோடு நிறுத்திக் கொண்டார்கள் போல.
பொங்கல் தொகுப்பு
பொங்கல் தொகுப்பு

பேரிடர் ஏற்படாத காலங்களில், தேர்தல் என்றால் மக்களுக்குக் கரிசனம் காட்டும் ஆட்சியாளர்கள், பேரிடர் காலங்களில் பெயருக்கு உதவுகிறார்கள் என்கிற பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். தேர்தல் என்றால்தான் அறிவிப்பும் அமர்க்களமாக வருகிறது. அப்படிக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்பு அப்படியே அமுங்கிப் போய்விட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் தருவதாகச் சொன்ன 2,000 ரூபாயை எப்போது போடுவீர்கள் எடப்பாடியாரே?

2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு

2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு 

சட்டப்பேரவை 110-விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான், ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டம். ``வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதாவது 2019 பிப்ரவரி 12-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் எடப்பாடி. ``கஜா புயல் மற்றும் பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட ஏழைகளைக் கருத்தில்கொண்டு 2,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்று அந்தத் திட்டத்துக்கு நியாயம் கற்பித்தார் எடப்பாடி.

``நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது’’ என்று சட்டமன்றத்தில் தி.மு.க சொன்னபோது, அதை மறுத்த எடப்பாடி, ‘‘பிப்ரவரி இறுதிக்குள் தகுதியான பயனாளிகளின் வங்கிக்கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தப்படும்’’ என்று சொன்னார். ஆனால், பணம் வரவில்லை.

`நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் சூழலில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கிறது’ என்று சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சட்டப்பஞ்சாயத்து இயக்கம். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் விவரம் அரசிடம் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், அந்த விவரங்களைச் சேகரிக்கும் வகையில் படிவங்களை விநியோகித்தது அ.தி.மு.க அரசு. அப்போதுதான் வாக்குகள் கிடைக்கும் என்பது அ.தி.மு.க-வின் திட்டம்.
Representational Image
Representational Image

2,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை, 2019, மார்ச் 4-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் எடப்பாடி. மனிஷா என்கிற திருநங்கை உட்பட 32 பேரின் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியுதவிக்கான சான்றிதழ்களை வழங்கினார். இதன்மூலம் பணம் வந்து சேரும் என்பதை மக்களிடையே பறைசாற்றினார். நாடாளுமன்றத் தேர்தல் தேதியை 2019, மார்ச் 10-ம் தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம். ``தி.மு.க. புகாரால் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் 2,000 ரூபாய் வழங்கப்படும்’’ எனத் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார் எடப்பாடி.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 10 மாதங்களாகிவிட்டன. 2,000 ரூபாய் யாருக்கும் போய்ச் சேரவில்லை. தேர்தல் வரும்போதெல்லாம் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, அரசின் கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து ஆளுங்கட்சி கொடுக்கிற அவலம்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது
2 ஆயிரம் ரூபாய் விழா விளம்பரம்
2 ஆயிரம் ரூபாய் விழா விளம்பரம்

இதில் கொடுமை என்ன தெரியுமா? 2,000 ரூபாய் திட்டத்துக்கு விழாவெல்லாம் நடத்தி விளம்பரமெல்லாம் செய்தார்கள். அந்த விழாவுக்குச் செலவழிக்கப்பட்ட தொகை பற்றிய ஆவணங்கள் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தன.
2,000 ரூபாய் வழங்கும் திட்ட விழாவுக்குத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டதற்குக் கட்டணமாக 1 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 390 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையைப் பிரித்துக் கொடுத்திருந்தாலே 5,623 பேருக்கு தலா 2,000 ரூபாய் வழங்கியிருக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுகளை அறுவடை செய்வதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டு அரசு பணத்தை விரயமாக்கினார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி சொன்னா வாக்குறுதி
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி சொன்னா வாக்குறுதி

இந்த 2 ஆயிரம் ரூபாயை இப்போது தருகிற ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து மூன்றாயிரம் ரூபாய் கொடுத்தால் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். தருவீர்களா எடப்பாடியாரே?

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.