2014 மே 21 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரை இது !
''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை.
''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை.
''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அரசியல் செல்வாக்கால், போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுப்பாடு இருந்தது; இது ஆளுங்கட்சிக்கு உதவியாக இருக்கிறது என புகார்கள் வந்தன. இதனால், அவரை மாற்ற முடிவெடுத்தோம். சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தோம்.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பார்வையாளராகப் போகச் சொன்னோம். உடனே அவர், 'தேர்தலைச் சீர்குலைக்கத் தமிழகத்தைத் தாக்க எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கும் தகவல் உளவுத் துறை மூலம் கிடைத்திருக்கிறது. அதோடு தேசிய தலைவர்கள் மூன்று பேரைத் தாக்கவும் எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கிறது’ என்று சொன்னார். அது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்க முயன்றார். 'தேர்தலில் பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் உங்களைத்தான் சந்தேகப்படுவோம்’ என்று சொன்னேன். கடைசியில் அவர் விடுப்பில் மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு மத்திய உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளையை அழைத்து விசாரித்தபோது 'எல்.டி.டி.ஈ மிரட்டல் எல்லாம் பொய். விடுதலைப் புலிகள் பற்றி அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார். அதன் பிறகு மூன்று பேர் லிஸ்டில் இருந்து ஒருவரை உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாகத் தேர்வு செய்தோம்'' என திகில் கிளப்பியிருக்கிறார் குரைஷி!
அடுத்து திருச்சியில் ஆர்.டி.ஓ-வாக இருந்த சங்கீதா பற்றி விவரிக்கிறார். ''பஸ்ஸில் 20 கோடி ரூபாய் பணம் கொண்டுசெல்லப்படுவதாக நள்ளிரவு 1.30 மணிக்கு சங்கீதாவுக்கு தகவல் கிடைக்க... உடனே பொன்நகர் ஏரியாவுக்குப் போகிறார் சங்கீதா. அங்கே பஸ்ஸும் இனோவா காரும் நிற்கின்றன. அருகில் இருந்த சி.ஆர்.பி.எஃப் போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுக்கிறார் சங்கீதா. அவர்கள் வந்து சேர்வதற்குள் கார் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸை சோதனையிட்டபோது 5.01 கோடி ரூபாய் சிக்குகிறது.
சுய உதவிக் குழு, காது குத்துதல், மொட்டையடித்தல், ஆரத்தித் தட்டு, திருமண விழா என விதவிதமான வழிகளில் தேர்தலில் பணம் விநியோக விவகாரம் நடந்துவருகிறது. இப்படி 40 வழிகளில் பண விநியோகம் செய்யப்படுவதைக் கண்டறிந்தோம்.
2009-ல் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்த பண விநியோகம் அமெரிக்கா வரை போனது. இதுபற்றிய உளவுத் தகவல் அமெரிக்காவுக்குப் போனதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணம், பொருள் வழங்குவது இந்தத் தேர்தலில் இருந்துதான் ஒரு அம்சமாக மாறியது. இது ஒரு குறிப்பிட்ட மத்திய அமைச்சரின் வெற்றி ஃபார்முலா ஆனது. திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை அந்த அமைச்சர் வழங்கினார். இந்த ஸ்டைல்தான் பிறகு 'திருமங்கலம் ஃபார்முலா’ எனப் பெயர் பெற்றது.
2011 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது திருமங்கலம் ஃபார்முலாவை முறியடிக்க தேர்தல் கமிஷன் புது ஃபார்முலாவைப் போட்டது. பீகாரில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தமிழகத்தில் பண ஆதிக்கத்தைத் தடுக்க ஆபரேஷனில் இறங்கினோம். பறக்கும் படைகள் மூலம் பண விநியோகத்தைத் தடுத்தோம். பணத்தை கொண்டுசெல்ல முடியவில்லை என்று வர்த்தக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால், தன்னார்வக் குழுக்கள் இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டதால், தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் தடையை விலக்கியது!'' என்று தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இது ஆவணமற்ற அதிசயம்தான்!
Comments